Friday 26 June 2020

சிவ புராணம் ( 48 )


48. துலா புருஷ தானம்






சதுர்தசி விரதத்தைச் சொன்ன சூதர், அடுத்து துலா புருஷ தானத்தையும் சொல்லத் தொடங்கினார். பலரைக் கொன்றவனும், பரஸ்திரியைப் புணர்ந்தவனும், மது மாமிசத்தைப் பக்ஷணஞ் செய்தவனும், சிசுஹத்தி புரிந்தவனும், குருபக்தியைக் கெடுத்தவனும், யாகம் செய்யத் தகாதவருக்கும் யாகம் செய்வித்தவனும் கடைத்தேற, துலா புருஷ தானம் செய்ய வேண்டும். ஒரு நாள் உபவாசமிருந்து பின்னரே இத்தானத்தைச் செய்யவேண்டும்.

இந்திரன், வருணன், வாயு, நிருதி, சுக்கிரன் முதலிய தேவர்களைத் திருப்திப்படுத்த முதலில் ஹோமம் செய்ய வேண்டும். பின்னர் கிரகதேவதை, இஷ்டதேவதை ஆகியோரைக் குறித்து ஹோமம் செய்ய வேண்டும். பின்னர் இரண்டு யாக ஸ்தம்பங்களை நிறுவி, அவற்றில் விக்ன ராஜரையும், ஸ்கந்தரையும் ஆவாகனம் செய்ய வேண்டும். அடுத்து சிவபெருமானைக் குறித்து, ருத்ர சூக்தத்தால் ஷோடசோபசார பூஜைகளைச் செய்துபூஜையை அங்கீகரிக்க வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

பூர்ணாஹுதி முடிந்ததும் தராசைக் கொண்டுவந்து நிறுத்தி, ஒரு தட்டில் திரவியங்களை வைத்து மற்றொரு தட்டில் தான் ஏறி நின்று, தன் பாவங்கள் நீங்கி தானம் பூர்த்தியாகப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

இத்தானத்தை இரண்டு முறை செய்பவன், சிவகணங்களில் ஒருவனாவான். மூன்று முறை செய்பவன், சிவ சாரூப்பியத்தை அடைவான். பௌர்ணமி, வருஷப்பிறப்பு, கிரகண புண்ணிய காலங்களில் இத்தானத்தைச் செய்தால், மிகுந்த விசேஷ பலனை அடைவார்கள். இருபத்தொரு தலைமுறை க்ஷத்திரிய வம்சத்தைப் பூண்டோடு அழித்த  பரசுராமர் தம் பாவம் தொலைய இத்தானத்தைச் செய்தார்.

ஒரு சமயம் குசிகன் என்னும் அரசன் இருந்தான். அவன் இந்திரனைக் குறித்துத்  தவம் செய்து அவனையே  புத்திரனாக அடைந்தான். அப்புதல்வனுக்குக் காதி என்று பெயர்.

காதிக்கு ஸத்தியவதி என்று ஒரு பெண் பிறந்தாள். அவளை நிசித முனிவருக்கு மணம் செய்து கொடுத்தனர். காதிக்குப் புதல்வன் பிறக்காததால் அந்தக் குறை நீங்க, நிசித முனிவர் ஓர் யாகம் செய்தார். யாககுண்டத்திலிருந்து இருகருக்கள் உற்பத்தியாயின. அவற்றை மனைவியிடம் கொடுத்த முனிவர், இவ்விரண்டையும் உன் தாயும் நீயுமாகப் புசித்தீர்களானால், உன் தாய்க்கு எவராலும் ஜெயிக்க முடியாத க்ஷத்திரிய வீரனும், உனக்கு பிராமண தர்மங்களில் குறைவின்றி என்னைப் போல் விளங்கும் ஞானப் புதல்வனும் பிறப்பார்கள்" என்று சொல்லி, வனத்துக்குத் தவம் செய்யச் சென்றார்.

அப்போது காதி தன் மனைவியோடு புதல்வியின் வீட்டுக்கு வந்தான். ஸத்தியவதி சந்தோஷத்தோடு தாயை வரவேற்று அழைத்துச் சென்று தன் கணவர் கூறியதை எடுத்துச் சொல்லி இரு கருக்களையும் அவளிடம் கொடுத்தாள்.

ஸத்தியவதியின் தாய் தன் மகளையே வஞ்சிக்க எண்ணம் கொண்டு தான் புசிக்க வேண்டியதை மகளுக்குக் கொடுத்து விட்டு அவள் சாப்பிட வேண்டியதைத் தான் புசித்துவிட்டாள். ஸத்தியவதிக்கு இது தெரியாது. அவள் கர்ப்பத்திலே க்ஷத்திரியர்கள் அனைவரையும் வெல்லக்கூடிய புத்திரன் உருவாகி வந்தான்.

முனிவர் ஞானதிருஷ்டியால் மனைவியின் கர்ப்பத்தில் இருக்கும் புத்திரனை உணர்ந்து, மனைவியை அழைத்து பிரியே, உன் தாய் உன்னை வஞ்சித்து விட்டாள். தான் புசிக்க வேண்டியதை உனக்கு அளித்துவிட்டு, உனக்குக் கொடுக்க வேண்டியதை அவள் உட்கொண்டு விட்டாள். உனக்கு மகா தபஸ்வியான தம்பி பிறக்கப் போகிறான். உன் வயிற்றிலோ பிராமண தர்மத்துக்கு விரோதமாக க்ஷத்திரியக் கரு வளர்ந்து வருகிறது" என்றார்.

கணவனின் வார்த்தைகளைக் கேட்ட ஸத்யவதி மிகவும் வருந்தி, நாதா, நம் தர்மாசாரங்களுக்கு விரோதமாக நடக்கப் போவதைத் தாங்கள் அனுமதிப்பீர்களா? இதற்கு ஒரு உபாயம் செய்ய வேண்டும்" என்று வேண்டினாள்.

பிரியே, நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லைஹோமம் செய்யும் போது உன் தாய்க்கு க்ஷத்திரியனான மகனும், உனக்கு பிராமணோத்தமனான மகனும்  பிறக்கவே மந்திரம் ஜபித்தேன். உன் தாய் செய்த வஞ்சனை இது. இதில் மாற்றம் செய்வது இனி இயலாத காரியம்" என்றார் நிசித முனிவர்.

ஸத்தியவதி கண்ணீர் விட்டபடி, நாதா, அப்படியானால் ஒன்று செய்யுங்கள். நமக்குப் பிள்ளையாகப் பிறந்தால் என்ன? பேரனாகப் பிறந்தால் என்ன? நமது பேரனாகவே அக்குழந்தை பிறக்கட்டும்" என்று வேண்டினாள்.

 நிசித முனிவரும் அவ்வாறு ஆக அனுக்கிரகித்தார். ஆகவே நிசித முனிவரின் புத்திரரான ஜமதக்னி முனிவரிடம் பரசுராமர் தோன்றினார்ஹைஹய வமிசத்தில் கிருதவீர்யனுக்குப் புத்திரனாகப் பிறந்த கார்த்தவீரியன் ஆயிரம் கைகளும் சூரியனைப் போன்ற தேக காந்தியும் கொண்டிருந்தான். அவன் திரிஷிதர் என்னும் முனிவரைப் பூஜித்து அவர் அருளால் அக்கினியே அஸ்திரமாக இருக்கும் வரம் பெற்றான்

அதனால் கர்வம் அடைந்த கார்த்தவீரியன் அனேக கிராமங்களையும் நகரங்களையும் கொளுத்தி அட்டகாசம் செய்து வந்தான். அவன் சென்ற இடமெல்லாம் அவனுக்குப்  பணிந்தன. அதனால் மேலும் செருக்குற்று அவன் முனிவர்களின் ஆசிரமங்களையும் கொளுத்தி அவர்களுக்குப் பெரும் தொல்லைகள் விளைவித்தான். ஆபஸ்தம்ப முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அவன் அவருடைய ஆசிரமத்தையும் கொளுத்த முயற்சிக்கையில், முனிவர்  பெரிதும் சினந்துவிரைவிலேயே ஸ்ரீ பரசுராமனால் சிரம் அறுக்கப்பட்டு உயிரிழப்பாய்எனச் சாபமிட்டார்.

 அப்போதும் அவன் இறுமாப்பு அடங்கவில்லை. ஒரு சமயம் கார்த்தவீரியன், ஜமதக்னி முனிவரது ஆசிரமத்துக்கு வந்தான். முனிவர் அவனை வரவேற்றுப் பலவாறு உபசரித்தார். திடீரென்று பரிவாரங்களுடன் வந்த தன்னை முனிவர் வரவேற்று, எப்படி அறுசுவை உண்டி அளித்தார் என்று யோசித்தான். அதற்கு அவரிடம் இருக்கும் காமதேனுவே காரணம் என்பதை அறிந்தபோது அவனுக்குத் தானும் அதை அடைந்திருக்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. முனிவரைப் பணிந்து அவருக்கு ஆசை வார்த்தைகள் பல கூறினான். காமதேனுவை தன்னிடம் கொடுத்துவிடும்படி  கேட்டுக் கொண்டான். அதற்குப் பதிலாக அனேக பசுக்களைக் கொடுப்பதாகக் கூறினான். முனிவர் அதற்கு இணங்க மறுத்துவிட்டார்.

அரசனோ காமதேனுவை விட்டுப் பிரிய மனமில்லாது முனிவரிடமிருந்து எவ்வகையிலாவது அதைக் கைப்பற்றிச் செல்ல வேண்டுமென்று முயற்சித்தான். அஸ்திரங்களால் முனிவரை அருகே நெருங்க விடாது செய்து, காமதேனுவைக் கைப்பற்றினான்.

இதற்குள் விஷயமறிந்து பரசுராமன் அங்கு வந்து சேர்ந்தான். கார்த்தவீரியனோடு போரிட்டு அவன் ஆயிரம் கரங்களையும் துண்டித்து விரட்டியடித்துக் காமதேனுவை மீட்டான்.

பரசுராமனிடம் தோல்வியுற்ற கார்த்தவீரியன் அப்போதும் காமதேனுவிடம் வைத்த ஆசையை விடவில்லை. பரசுராமன் தவம் செய்யச் சென்றிருக்கும் நேரத்தில் தன் புத்திரர்களை அனுப்பிக் காமதேனுவைப் பிடித்து வரச் செய்தான். அவர்கள், தடுத்த முனிவரை அஸ்திரங்களால் அடித்துக் கொன்று விட்டுக் காமதேனுவை  ஓட்டிச் சென்றனர். தவம் முடிந்து பரசுராமன் ஆசிரமம் திரும்பியதும் அங்கே நிகழ்ந்திருந்த கோரச் செயல்களைக் கண்டு  கோபமடைந் தான். தன் தந்தையைக் கொன்ற க்ஷத்திரிய குலத்தையே நிர்மூலம் செய்து விடுவதாகச் சபதம் செய்து கிளம்பினான். கார்த்த வீரியனையும் அவன் குமாரர்களையும் கொன்று வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான். அப்போதும் அவன் கோபம் தணியவில்லை. உலகெங்கிலும் க்ஷத்திரியப் பூண்டு இருக்கக் கூடாதென்று அனைவரையும் அழித்தான். ராஜ்ஜியங்களைப் பிராமணர்களுக்குத் தானம் செய்து விட்டு மீண்டும் தவம் செய்யச் சென்றான்.

க்ஷத்திரிய ஸ்திரீகள் அந்தப் பிராமணர்களையே மணந்து அவர்கள் மூலம் புத்திரர்களைப் பெற்று வம்சம் க்ஷீணமாகாது தடுத்தனர். தவத்தைப் பூர்த்தி செய்து கொண்டு வந்தபோது பரசுராமன் இந்த விஷயத்தை அறிந்தான். க்ஷத்திரியர் குலம் தலையெடுக்க விடக்கூடாதென்ற ஆத்திரம் அவனுள் இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது. பிராமணர்களின் மூலம் பிறந்தவர்களையும் அழித்தான். இவ்வாறு இருபத்தொரு தலைமுறையினரை அழித்துத் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான்.

முடிவில் தான் செய்த கொலைகளின் பாவம் தன்னைச் சூழாதிருக்க, பூமண்டலம் முழுமையும் காசிப முனிவருக்கு தானம் செய்தான். அப்போதும், அவன் புனிதனாக முடியவில்லை. அசுவமேத யாகம் செய்தும் அவன் பாவம் நீங்கவில்லை. கடைசியில் சிவபெருமானைக் குறித்துத் தவம் மேற்கொண்டான். பகவானும் அவனுக்குப் பிரத்தியக்ஷமாகித் துலாபுருஷ தானம் செய்தால் அன்றி அந்தத் தோஷம் நீங்காது என்று சொல்லி விட்டார். அவ்வாறே பரசுராமன் விதிப்படி துலாபுருஷ தானம் செய்து தன் பாவங்கள் நீங்கிப் புனிதத் தன்மையை அடைந்தான்.

துலா புருஷ தானத்தை ஒரே ஒரு வேதியனுக்கு மட்டும் கொடுக்கக் கூடாது. அந்தத் திரவியங்களைப் பல பகுதிகளாகப் பிரித்து பல பேருக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பலன் சித்திக்கும்.


ஹரி ஓம் !!!














No comments:

Post a Comment