Friday 19 June 2020

அங்காளம்மன்

எதிரிகளை அழிப்பாள் மேல்மலையனூர் அங்காளம்மன்!

எதிரிகளை அழிப்பாள் மேல்மலையனூர் அங்காளம்மன்!
மேல்மலையனூர் அங்காளம்மனை, வணங்குங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் பலமிழக்கச் செய்வாள். உங்கள் வாழ்க்கையை உயர்த்தியருள்வாள் அன்னை.

எதிரிகளும் எதிர்ப்புகளும் வாழ்வின் தடைகளாகவும் மனக்கலக்கமாகவும் இருந்து இம்சை செய்கின்றன. வாழ்வில் முன்னேற விடாமல், ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிற கதையாக துன்பப்படுத்துகின்றன. எதிரிகளை வெல்லவும் எதிர்ப்புகளைக் கடக்கவும் இறையருள் மிக மிக அவசியம்.

கண்ணுக்குத் தெரிகிற எதிரிகளை வெல்வது மிக எளிது. கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளை வெல்வதுதான் மிகக் கடினம். அந்த எதிர்ப்புகள் நம்முடைய இப்போதைய தவறாக, சோம்பேறித்தனமாக, கூடாநட்பாக, சரியான திட்டமிடுதலின்மையாக, திட்டமிட்டாலும் செயல்படுத்துவதில் வேகம் காட்டாததாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

பொருளாதாரப் பிரச்சினையாலோ நம்முடைய தன்முனைப்பு இல்லாத நிலையாலோ, நம்முடைய திட்டத்தை ஊக்குவிக்காத உறவுகளாலோ எதிர்ப்புகள் தடையாக இருந்து அடுத்தக்கட்டத்துக்கு நம்மை நகர்த்திச் செல்லாமல் இருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நம் முன்னோர் செய்த பாவமும் புண்ணியமும் நம் தலையில்தான் ஏறும். நாமே முன் ஜென்மத்தில் செய்த வினைகளின் பலன்களை இந்தப் பிறவியில் அனுபவிக்க நேரிடும். எனவே இப்படி எதிர்ப்புகள் அனைத்தையும் வலுவிழக்கச் செய்வது இறையருளால் மட்டுமே சாத்தியம். இறை வழிபாட்டால் மட்டுமே
திண்டிவனம் அருகில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் சக்தி வாய்ந்தவள். சாந்நித்தியம் நிறைந்த ஆலயம். ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையிலும் மாதந்தோறும் அமாவாசையிலும் அங்காளம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும்.

ஒருமுறையேனும் அங்காளம்மனை மனதார நினைத்து வீட்டில் விளக்கேற்றி, பாயசம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால்... எதிர்ப்புகளெல்லாம் தவிடுபொடியாகும். எதிரிகளெல்லாம் தலைதெறிக்க ஓடுவார்கள். இதுவரை இருந்த காரியத்தடைகள் அனைத்தும் விலகும்.

அங்காளம்மன், தீயதை அழிப்பவள். கெட்டது எங்கு நடக்கிறதோ அங்கே தோன்றி அதை வேரோடு சாய்ப்பவள். நல்லவர்க்கு பங்கம் வந்தால், அவர்களை கைதூக்கிவிடுபவள். கருணையுடன் அவர்களின் குடும்பத்தை உயர்த்துபவள்.

செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில், அங்காளம்மனை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வேண்டிக்கொள்ளுங்கள். பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி முதலான இனிப்பை, நைவேத்தியம் செய்யுங்கள். அக்கம்பக்காதருக்கு அவற்றை வழங்குங்கள்.

அதேபோல், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அங்காளம்மனை நினைத்துக் கொண்டு, மாலையில் விளக்கேற்றி, குடும்பத்தாரை நடுஹாலில் அமரச்சொல்லி, திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.

இல்லத்தில் இதுவரை இருந்த தடைகள் யாவும் தகர்ந்துவிடும். வேலை, வியாபாரம், திருமணம் முதலான விஷயங்கள் ஏற்றம் தரும். அன்னையாய் இருந்து நமக்கு அருள்பாலிப்பாள் அங்காளம்மன்!

No comments:

Post a Comment