Wednesday 24 June 2020

சிவ புராணம் ( 46 )


46. தில ஹஸ்தி தானம்





பூமி தான விசேஷத்தைத் தெரிவித்த சூதர் மேலும் ஒரு விருத்தாந்தத்தைச் சொல்லத் தொடங்கினார்.

பிருது சக்கரவர்த்தி அரசாட்சி செய்து வந்தபோது அவன் புகழ் சகல லோகங்களிலும் பரவியிருந்தது. நாட்டிலே மக்கள் சந்தோஷத்தோடு வாழ்க்கை நடத்தி வந்தனர். நோயாளிகள்திருடர்கள், பரிசுத்தமற்றவர்கள், வஞ்சகர்கள் ஆகியோர் நாட்டில் இல்லை. எங்கும் தருமம் செழித்தது.

இதைக்கண்ட அவன் மனைவி பெரிதும் களிப்புற்றுக்  கணவரிடம் தெரிவித்தாள். அரசனும் மனம் களித்தவனாய், பிரியே, நமக்குக் கிட்டியிருக்கும் பாக்கியம் சர்வ சாதாரணமாகக் கிடைத்தது அல்ல. நாம் முற்பிறப்பில் பெரும் புண்ணிய தர்மங்கள் செய்திருக்க வேண்டும். அதனாலேயே நாமும் நம் நாட்டு மக்களும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்" என்றான். பின்னர் அரசன் வேதப் பிராமணர்களை அழைத்து பெரியோர்களே, பகவத் பிரசாதத்தால் நான் சுகபோகத்தில் திளைத்து வருகிறேன். குடிமக்களும் மகிழ்ச்சியோடு இருந்து வருகிறார்கள். பூர்வ ஜென்மத்தில் நான் என்ன புண்ணிய கர்மா செய்தேன்? என்பதை விவரிக்க வேண்டும்" என்று வேண்டினான். அவர்களும் மரீசி முனிவரை அடைந்து அவரைக் கேட்குமாறு தெரிவித்தனர்.

அரசன் முனிவரிடம் சென்று அவரைப் பூஜித்துத் தான் அறிய விரும்புவதைப் பற்றிக் கேட்டான். அரசன் முன் ஜன்மத்தில் செய்த புண்ணிய கர்மாவைத் தன் தபோபலத்தால் உணர்ந்து விவரித்தார் முனிவர்.

அரசே, முன் ஜன்மத்தில் நீ நான்காம் வருணத்தில் பிறந்தவன். உன் மனைவி உன்னிடம் நீங்காத பக்தி கொண்டாள். ஏழ்மையால் நீ உன் மனைவியை விட்டு விட்டு ஒருவரிடம் வேலைக்கு அமர்ந்தாய். அப்படியிருந்தும் அவள் உன்னை விட்டு விலகாமல் அவ்வப்போது உன்னைக் கண்டு பணிவிடை செய்து, நீ செய்யும் ஊழியங்களில் உனக்கு உறுதுணையாக இருந்தாள்.

அப்போது அரசன்விஷ்ணுவுக்கு ஓர் ஆலயம் எழுப்பித்தான். நீயும் உன் மனைவியும் தினமும் ஆலயத்தை சுத்தம் செய்து தரையைச் சாணமிட்டு மெழுகி வந்தீர்கள். அந்தத்  தொண்டின் பலனே இப்பிறவியில் நீங்கள் அரச போகத்தோடு வாழ்ந்து வருகிறீர்கள். இந்தப் போக பாக்கியங்கள் உங்களுக்கு என்றும் நிலைத்திருக்க, சத்பிராமணர்களுக்குப் பூதானம், சொர்ண தானம் செய்யுங்கள். தருமார்த்த காம மோக்ஷம் எனப்படும் சதுர்வித புருஷார்த்தங்களும் பூதானம், சொர்ண தானம் செய்யும் ஒருவரிடம் ஒருங்கே அமையும்" என்றார் மகரிஷி.

தான விசேஷங்களைச் சொல்லி வந்த சூதரைப் பார்த்து முனிவர்கள் கேட்டனர்.

ஸர்வக்ஞ! பிரம்மஹத்தி முதலான பெரும் பாபங்கள் நீங்க, பூதானம், சொர்ண தானம் செய்யும் வழிகளை எடுத்துக் கூறினீர்கள். சக்தி உள்ளவர்களாலேயே இம்மாதிரி தானங்கள் செய்ய முடியும். வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது? அதற்கு வழி இருக்கிறதா? அப்படியானால் அதை விளக்கிக் கூற வேண்டும்" என்று வேண்டினர்.

சூதரும் மகிழ்ச்சி அடைந்து சொல்லத் தொடங்கினார்

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியின் போதோ, நாக சதுர்த்தியின் போதோ எள்ளினால் யானை வடிவம் செய்து அதற்குச் சந்தனம், குங்குமம் முதலான இட்டு பூஜை செய்ய வேண்டும். யானையின் முன் குங்குமத்தால் அஷ்டதள பத்மம் வரைந்து அதன் மேலே சிவனையும் விஷ்ணுவையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். பின்னர் தாமரையின் கிழக்குப் பக்கத்திலிருந்து வரிசையாக இந்திரன், அக்கினி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரையும் அந்தந்தத் திக்கிலே ஸ்தாபிதம் செய்து பூஜிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் பக்கத்திலே கன்றோடு கூடிய பசுவையும் கட்டிவைத்துப் பூஜை செய்யலாம். எள்ளால் செய்யப்பட்ட யானையின் கண்களுக்கு முத்துக்களும், பற்களுக்கு வெள்ளியும், நெற்றியில் திலகமாய்ப் பொன்னும், கண்களில் தாமரையும், கழுத்திலே வெண்கல மணியையும், உடலுக்குப் பட்டு வஸ்திரமும் சாற்றி, முத்துமாலை, பாதுகை, குடை, கிண்ணம், ஆசனம், கண்ணாடி ஆகியவற்றையும் வைக்கலாம்.

பூஜை முடிந்ததும் சத்பாத்திரன் ஒருவனுக்கு இப்பொருள் களைத் தானம் செய்து, தில ஹஸ்தியையும் தானம் செய்ய வேண்டும். இதனால் அவன் யமலோகத்தை  எவ்விதக் கஷ்டமுமின்றிக் கடக்கலாம். அவன் செய்த பிரம்மஹத்தி முதலான பெரும்பாவங்கள் நசித்துப் போகும்.

அன்று முழுவதும் அவன் உபவாசமிருந்து மாலையில் தீப தானம் செய்து பின்னரே உணவருந்தலாம்.


 தான விசேஷங்களைக் கூறி முடித்த சூதர், அடுத்து சதுர்தசி விரத மகிமையைக் கூறத் தொடங்கினார்.

ஹரி ஓம் !!











No comments:

Post a Comment