Thursday 11 June 2020

சிவ புராணம் ( 33 )


33. வேடன் பெற்ற ஞானம்






கானகம் ஒன்றில் குருத்ருகன் என்னும் பெயருள்ள வேடன் இருந்தான். அவன் மகாகுரூரன், பிராணிகளைக் கொல்வதில் கொஞ்சமும் தயங்காதவன்.

ஒரு சமயம் அவன் குடும்பத்தார் ஆகாரமின்றிப் பசியால் வருந்த நேரிட்டது. கையிலிருந்த பொருள்களும் தீர்ந்து விட்டன. வேட்டையிலும் பெரிய மிருகங்கள் எதுவும் சிக்கவில்லை. அன்றைய தினம் பொழுது விடிந்ததும், அவன் பெற்றோர்கள் அவனைப் பார்த்து எப்படியாவது அன்றைய தினம் ஆகாரத்துக்கு மிருகங்களை வேட்டையாடி வருமாறு சொன்னார்கள். பசியை அவர்களால் பொறுக்க முடியவில்லை. சாப்பிட்ட சொற்ப வகைகளும் பசியைத் தணிப்பதற்கு பதில் அதிகரிக்கச் செய்துவிட்டன.

அன்று சிவராத்திரி தினம். வேடன் வில்லை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். கானகம் முழுவதும் அவன் அலைந்தான். ஒரு மிருகம் கூட அவன் பார்வைக்குத் தட்டுப்படவில்லை. அஸ்தமிக்கும் பொழுதாகிவிட்டது. வெறும் கையுடன் வீடு திரும்புவதை அவன் விரும்பவில்லை. ஏதாகிலும் கொண்டு வருவான் என அவன் குடும்பத்தார் ஆவலோடு காத்திருப்பார்களே!

ஓர் தடாகத்தை அடைந்து அதன் தெளிந்த நீரை இரு கைகளாலும் வாரிப் பருகினான். பிறகு சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பிக்கொண்டு அதன் கரையிலிருந்த வில்வ மரம் ஒன்றில் ஏறிப் பதுங்கிக் கொண்டிருந்தான். இரவில் தாக சாந்திக்காக மிருகங்கள் தடாகத்துக்கு வரக் கூடுமென்றும், அப்போது அவற்றைக் கொன்று வீட்டுக்குக் கொண்டு செல்லலாமென்றும் எண்ணியிருந்தான். அன்றிரவு பூராவும் அவன் ஆகாரம் ஏதுமின்றி நித்திரையுமில்லாது கண் விழித்திருக்க வேண்டியிருக்கிறதே என்பதை நினைத்து வருந்தியபடி அமர்ந்திருந்தான்.

முதல் ஜாமத்தில் பெண் மான் ஒன்று நீர் அருந்த அங்கே வந்தது. அதைக் கண்ட வேடன் சந்தோஷம் அடைந்து வில்லில் அம்பைப் பூட்டினான். அந்த அசைவினால் அவன் கையில் பிடித்திருந்த பாத்திரத்திலிருந்து ஒரு சொட்டு ஜலம் தளும்பி கீழே மரத்தினடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. அதே சமயம் அவன் அமர்ந்திருந்த கிளையின் அசைவினால் அதிலிருந்து ஒரு வில்வதளம் உதிர்ந்து கீழிருந்த சிவலிங்கத்தின்மேல் விழுந்தது.

கிளையின் அசைவினால் ஏற்பட்ட சப்தத்தைக் கேட்டு திரும்பிய பெண்மான் வேடா, என்ன காரியம் செய்யப் போகிறாய்?" என்று கேட்டது.

மிருகமே, நானோ பெரிய குடும்பஸ்தன். என் வீட்டிலுள்ளவர்கள் பசியால் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆகாரம் தேடி வந்த எனக்கு இன்று முழுவதும் வியர்த்தமாகி விட்டது. ஒரு சிறு பறவை கூடக் கிடைக்க வில்லை. எப்படியும் தாக சாந்திக்காக எந்த மிருகமாவது தடாகத்துக்கு வருமென்று காத்திருந்தேன். நீ வந்து சேர்ந்தாய்உன்னைக் கொன்று எடுத்துச் சென்று என் வீட்டிலுள்ளவர் களின் பசியைப் போக்க வேண்டும்" என்றான் வேடன்.

உன் வார்த்தைகளைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? இந்தப் பிறவி எடுத்து என்னதான் பிரயோசனம்? என் மாமிசத்தால் உன் குடும்பத்தினர் பசியின் கொடுமையிலிருந்து மீளப் போகிறார்கள் என்றால், அந்த பாக்கியம் எனக்குக் கிட்டியது பற்றி நான் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். பரோபகாரத்தால் அடையும் பலனைப் பற்றி எவ்வளவோ சொல்லுகிறார்கள். இந்த மாமிச உடல் இன்னொருவருக்காவது பிரயோசனப்படுகிறதே என்பதை நினைக்கும் போது என் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகமாகிறது. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு வருத்தமிருக்கிறது. எனக்குக் குட்டிகள் இருக்கின்றன. அவை இன்னும் தனியாக இரை தேடும் அளவுக்கு வளரவில்லை. ஆகவே, அவற்றைத் திண்டாடவிட்டுச் செல்ல வேண்டியிருக்கிறதே என்பதை நினைத்தால் வருத்தம் உண்டாகிறது. எனக்கும் சிறிது அவகாசம் கொடு. நான் திரும்பிச் சென்று அக்குட்டிகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பி வந்து விடுகிறேன். அதன் பின் என்னைக் கொன்று இறைச்சியை எடுத்துச் செல்லலாம்" என்றது மான்.

வேடன் சிரித்தான்.

ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டது மான்.

எவ்வளவு அழகாகப் பொய் சொல்லுகிறாய் என்பதை நினைக்கும்போது சிரிப்பு வராமல் என்ன செய்யும்? ஆபத்து நெருங்கிய காலத்தில் அதிலிருந்து மீள சாமர்த்தியமாகத்தான் பேசுகிறாய். உன்னை விட்டுவிட்டால் அப்புறம் திரும்பி வருவதேது?" என்றான் வேடன். ஐயா, என் வார்த்தையில் நம்பிக்கை வையுங்கள். நான் வார்த்தை தவற மாட்டேன். உயிருக்குப் பயந்து பொய் சொல்லுவதாக எண்ணாதீர்கள். இந்த உலகமே சத்தியத்தில் தான் நிலைத்திருக்கிறது. சூரிய சந்திரர்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டே இயங்கி வருகிறார்கள். சத்தியத்துக்குக் கட்டுப் பட்டிருக்காவிடில் சமுத்திரம், பூமியை விழுங்கியிருக்காதா? நான் சத்தியமாகத் திரும்பி வருவேன். என்னை நம்பலாம். வார்த்தை தவறி நான் நடப்பேனாகில் பெரும் பாவம் என்னை அடையட்டும். வேதத்தை விற்கும் பிராமணன், மூன்று காலங்களிலும் சந்தியாவந்தனம் செய்யாத அந்தணன், கணவன் கட்டளையை மதித்து நடக்காத மனைவி, செய்த நன்றி மறந்து, நன்மை செய்தவனுக்கே தீமை செய்யும் அயோக்கியன், குருத்துரோகி, சிவத்துரோகி ஆகியோர் அடையும் பாபங்கள் என்னைச் சூழட்டும்" என்றது மான்.

வேடன் அதன் வார்த்தைகளை ஏற்று போய் வர அனுமதித்தான். மான் தாகசாந்தி செய்து கொண்டு காற்றினும் கடுகிய வேகத்தில் ஓடியது.

இரண்டாம் ஜாமத்தில் அங்கே மற்றொரு பெண் மான் வந்தது. முதல் ஜாமத்தில் வந்திருந்த மானோடு கூடப் பிறந்தது அது. இரண்டு மான்களும் ஒரே ஆண் மானை கணவனாக வரித்திருந்தன. இந்த இரண்டு பெண் மான்களும், ஆண் மானும் குட்டிகளோடு ஒரே இடத்தில் வசித்து வந்தன. தாகசாந்திக்காகச் சென்ற சகோதரியை வெகு நேரமாகியும் காணவில்லையே என்று தேடிக்கொண்டு அது குளக்கரைக்கு வந்தது. மானைக் கண்டதும் முன் போலவே அதைக் கொல்ல வேடன் வில்லை எடுத்தான். அப்போதும் அவன் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து சில துளிகள் நீரும் கிளையிலிருந்து வில்வதளமும் சிவலிங்கத்தின் மீது விழுந்தன.
வேடன் அம்பு எய்ய யத்தனிக்கும் போது மான் அவனைப் பார்த்து, என்ன செய்யப் போகிறாய்" என்று வினவ, அவனும் அதைக் கொன்றுத் தன் குடும்பத்தாரின் பசியை தீர்க்கப் போவதாகக் கூறினான்.
பெண்மான் அவனைப் பார்த்து ஐயா என் உடலால் சில உயிர்கள் பசியைத் தணித்து பிழைத்திருக்க முடியும் என்பதைக் கேட்டுச் சந்தோஷம் கொள்கிறேன். இந்த உபகாரமாவது செய்ய என்னால் முடிந்ததே என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. இருப்பினும் எனக்குச் சில குட்டிகள் இருக்கின்றன. அவற்றை என் கணவனிடம் ஒப்புவித்துப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு உடனே திரும்பி விடுகிறேன். அதுவரை எனக்கு அவகாசம் கொடு" என்று வேண்டியது.

உன் வார்த்தையை நம்ப  முடியாது. நீ ஏமாற்றி விடுவாய்" என்றான் வேடன்.

ஐயா, அப்படி எண்ணாதே. நான் வார்த்தைத் தவறி நடக்க மாட்டேன். என்னை நம்பு நான் மறுபடியும் உன்னிடத்தில் வராவிட்டால், அசத்தியமான வார்த்தைகள் சொன்னவர்கள், அதுவரை தாங்கள் செய்த புண்ணியங்களை இழந்து எந்த பாபத்தில் போவார்களோ, அந்தப் பாபத்தில் நானும் போவேன். பூமியை அடிக்கடி காலால் உதைப்பவரும், கற்புள்ள மனைவியை விட்டு, விலக்கான சோர ஸ்திரீயிடம் சென்ற வரும், வேதங்களில் சொல்லப்பட்டதற்கு மாறாக நடப்பவரும்விஷ்ணுவிடம் பக்தி கொண்டு சிவனைத் தூஷிப்பவரும், சிவனிடம் பக்தி கொண்டு விஷ்ணுவைத் தூஷிப்பவரும், தாய் தந்தையர்களின் வருஷாப்திகத்தை விட்டுவிட்டவரும், இதமான வார்த்தைகளைக் கூறிப் பின்னர் வஞ்சிப்பவர்களும் அடையும் பாபங்கள் என்னைச் சேரட்டும்" என்றது மான்.
வேடனும் அதன் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு முன்போலவே  அதைப் போக விடுத்தான்.

இரண்டாம் ஜாமம் முடிந்து மூன்றாம் ஜாமம் தொடங்கியது. குளக்கரைக்கு வந்து சென்ற இரண்டு பெண்மான்களின் கணவனான ஆண் மான் அவை இரண்டையும் தேடிக் கொண்டு அங்கே வந்தது. நன்றாகக் கொழுத்திருந்த அதைப் பார்த்ததும்இதுவே நல்ல வேட்டைஎன்று எண்ணியவனாய் வேடன் வில்லை எடுத்து அம்பைப் பூட்டினான். அப்போதும் அவனிடமிருந்த பாத்திரத்திலிருந்து ஜலம் தளும்பி ஒரு சொட்டு சிவலிங்கத்தின் மீது விழுந்தது. கிளையிலிருந்த சில வில்வ தளங்களும் சிவலிங்கத்தின் மீது உதிர்ந்தன.

வேடன் அம்பெய்ய யத்தனிப்பதைக் கண்ட ஆண் மான், ஐயா, என்னை கொல்லப் போகிறாயா?" என்று கேட்டது. வேடனும் முன் போலவே அதனிடம் தன் குடும்பத்தாரின் பசி தீர்க்கக் கொல்லப் போவதைத் தெரிவித்தான்.

ஐயா, தங்கள் குடும்பம் என் ஒருவனால் பிழைத்திருக்கு மென்றால் நான் பிறவியெடுத்ததானது வியர்த்தமாகவில்லை. எனக்குச் சில குட்டிகள் இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பாக ஒப்புவித்து விட்டு உடனே திரும்பி விடுகிறேன். அதுவரை எனக்கு அவகாசம் கொடு" என்று கேட்டது.

வேடன் அதற்குச் சம்மதிக்கவில்லை. இப்படித்தான் இரண்டு மான்கள் சொல்லிவிட்டுச் சென்றன. அவை திரும்பி வரவே இல்லை. உன்னையும் விட்டுவிட்டு என் குடும்பத்தைப் பட்டினி கிடக்கும்படி விடச்சொல்கிறாயா?" என்று கேட்டான்.

ஐயா, உன்னை ஏமாற்றிவிட்டுத் தப்பித்துச் செல்ல வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. உனக்கு எப்படி  வேண்டுமானாலும் பிரமாணம் செய்கிறேன். பொய் சொல்லுகிறவன் அந்த க்ஷணத்திலே அவன் செய்த புண்ணியங்களை இழந்து விடுவான். நான் உண்மையே பேசுகிறேன். சந்தியாவந்தன காலத்திலும் சிவராத்திரியிலும் போஜனம் செய்பவன், பொய்சாக்ஷி சொன்னவன், அடகு வைத்த பொருளை அபகரித்துக் கொண்டவன், புசிக்கத் தகாதவற்றைப் புசித்தவன் ஆகியோர் அடையும் பாபங்கள் நான் வார்த்தை தவறுவேனாகில் என்னைப் பீடிக்கட்டும்" என்றது மான்.

வேடன் அதையும் போய் வர அனுமதித்தான். ஆண் மான் தன் இருப்பிடத்தை நோக்கி ஓட்டமாய் ஓடியது.

அங்கே இரண்டு பெண் மான்களும் கணவனுக்காகக் காத்திருந்தன. ஆண்மான் வந்ததும் மூன்றும் கூடி நடந்தவற்றைப் பரிமாறிக் கொண்டன.

பெண் மான்களில் மூத்தது சகோதரி, நீ இங்கு இருந்து கொண்டு நம் குழந்தைகளையும் கணவரையும் காத்து வா. நான் முதலில் வாக்குக் கொடுத்ததால் நானே வேடனுக்கு இரையாகச் செல்கிறேன்" என்றது.

இளைய மானோ, அக்கா, அதெப்படி நீ போக முடியும்? நான் இரண்டாவது தாரமல்லவா, உங்களுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைத் தவிர என்ன வேலை இருக்கிறது? நீ இங்கிருந்து கணவரையும் குழந்தைகளையும் காப்பாற்றி வா. நான் போகிறேன்" என்றது. ஆண் மானோ, ’அவர்கள் இருவரும் அங்கிருக்கட்டும் என்றும், தானே போவதாகவும் தெரிவித்தது. கடைசியில் மூன்றுமாக ஒன்றுகூடிக் குட்டிகளை வேறொரு மானிடம் ஒப்புவித்து விட்டு வேடனிடம் வந்தன.

இதற்குள் மூன்றாம் ஜாமம் முடிந்தது. நான்காம் ஜாமம் வந்துவிட்டது. மான்களைக் காணவில்லையே என்று வருத்தத்துடன் உட்கார்ந்திருந்த வேடன் அம்மூன்றும் ஒருங்கே வருவதைக் கண்டதும் மகிழ்ச்சியால் துள்ளினான். அப்போதும் அவன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து சிறிது ஜலமும் மரத்திலிருந்து சில வில்வ தளங்களும் பகவானின் மீது விழுந்தன. அவன் ஜீவ வதை செய்யும் ஒரே உள்ளத்தைக் கொண்டிருந்தவனாகிலும், அன்றைய தினம் சிவராத்திரி தினமாகையால், சிவபெருமானை நான்கு ஜாமங்களிலும் உபவாசமிருந்து கண் மூடாது பூஜித்த பலனைப் பெற்றான். அப்போதே அவன் நல்லறிவு பெற்றுவிட்டான்.

ஆஹா, கேவலம் மிருகங்கள். இருப்பினும் தாங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எனக்கு இரையாக வந்துள்ளன. நானோ இவர்களை விட எத்தனையோ மேன்மையான மானிடப் பிறவியை அடைந்துள்ளேன். அந்தப் பாவங்களை எல்லாம் எப்படிப் போக்குவிப்பேனோ? நடந்தது நடந்துவிட்டது, இனியாகிலும் உத்தம வாழ்க்கை நடத்த வேண்டும்" என்று எண்ணித் துக்கித்தவனாய் கையிலிருந்து வில்லை முறித்து எறிந்தான்.

மிருகங்களே, நீங்கள் உத்தமமானவர்கள். வார்த்தையைக் காப்பாற்றச் சொன்னபடியே வந்துள்ளீர்கள். உங்களைக் கொல்ல மாட்டேன். ஏன், இனி ஜீவவதை செய்யவே மாட்டேன். நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். உங்களால் என் மூட அறிவு அகன்றது" என்றான்.

அதே சமயம் ஐந்து முகத்தோடு பகவான் கைலாசநாதன் அங்கே தோன்றினார்.

வேடனே, சிவராத்திரி அன்று தெரிந்தோ தெரியாமலோ சிவபூஜை செய்தவர்கள் எப்பேர்ப்பட்ட பாபியாக இருந்தாலும் மோக்ஷத்தை அடைவார்கள். நான்கு ஜாமங்களிலும் உன்னால் நான் அபிஷேகம் செய்விக்கப்பட்டு வில்வ தளத்தால் அர்ச்சிக்கப்பட்டேன். உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்" என்றார்.

பிரபோதங்கள் தரிசனம் கிட்டிய பிறகு எனக்கு வேறு என்ன வேண்டியிருக்கும்? இத்தனை காலமாக அறியாமையின் காரணமாக ஜீவவதை செய்து வந்திருக்கிறேன் அந்தப் பாபங்கள் அகல அனுக்கிரகிக்க வேண்டும்" என்று வேண்டினான் வேடன்.
சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து அவனைப் பார்த்து மேலும் சொன்னார்
வேடா, இன்று முதல் நீ குகன் என்ற பெயரோடு விளங்கி வருவாய். உன் பெருமை நான்கு திசைகளிலும் பரவும். எல்லோரும் உன்னைக் கொண்டாடுவார்கள். அயோத்தி மன்னன் தசரதன் மைந்தனாகப் பிறந்து, தந்தை வாக்கைக் காப்பாற்றும் நிமித்தம் வனத்துக்கு வருவார் மகாவிஷ்ணு. அவரோடு உனக்குத் தோழமை ஏற்பட்டு உன் மகிமை மேலும் விளங்கும்" என்று அருளினார்.
அப்போது மான்களின் குட்டிகளும் அங்கே வந்து சேர்ந்தன. தாயும் தந்தையும் நற்காரியத்துக்காக வேடனுக்கு இரையாகச் செல்லும்போது தங்களுக்கும் அந்தப் பாக்கியம் கிட்டட்டுமென்று குளக்கரைக்கு வந்து சேர்ந்தன. பகவான் மான்களுக்கும் அதன் குட்டிகளுக்கும் மோக்ஷத்தை அளித்து மறைந்தார்.

நைமிசாரணியவாசிகளுக்குச் சிவராத்திரி மகத்துவத்தை எடுத்துச் சொன்ன சூதர், மேலும் அதன் மகிமையை விளக்க இன்னொரு விருத்தாந்தத்தைச் சொல்லத் தொடங்கினார்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment