Wednesday 10 June 2020

சிவ புராணம் ( 32 )


32.. சிவராத்திரி விரத மஹிமை



மோக்ஷம் கொடுக்கவல்லதாக நான்கு சொல்லப் படுகின்றது. அவை, சிவார்ச்சனை, ருத்திரபாராயணம், அஷ்டமி சோமவாரம், கிருஷ்ண பக்ஷம் சதுர்தசி, அதாவது சிவராத்திரி தினம், பிரதோஷம் ஆகிய மூன்று நாட்களிலும் உபவாசம், காசியில் மரணம் ஆகியவையே ஆகும். இந்த நான்கிலும் சிவராத்திரி விரதமே விசேஷமானதாகும்.

மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷத்து சதுர்தசி அர்த்த ராத்திரியே, மகா சிவராத்திரி எனப்படும். அன்றிரவு பதினான்கு நாழிகையின்போது கோடி பிரம்மஹத்திகளையும் போக்கக் கூடியதாகப் பலன் சொல்லப்பட்டுள்ளது.

அன்றையத் தினம் காலையில் எழுந்து நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பகவானைத் தரிசித்து, சர்வேச்வரா, இந்த மானிடப்பிறவி துக்கம் நிறைந்ததும், சாரமற்றதுமாக இருப்பதால் இதைப் பயனுடையதாக ஆக்க சிவராத்திரி விரதம் மேற்கொண்டுள்ளேன். விரதம் பூர்த்தியாகும் வரை எவ்வகையான தடங்கல்களும் உண்டாகாதிருக்குமாறு அனுக்கிரகிக்க வேண்டும்" எனப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

அஸ்தமித்ததும் நீராடி பரிசுத்தமானதும் தோய்த்து உலர்ந்ததுமான வஸ்திரம் தரித்து பகவானைத் தியானித்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். நான்கு ஜாமங்களிலும் நான்கு லிங்கங்களை மண்ணால் செய்து பூஜை செய்ய வேண்டும். வேதோக்தமான பிராமணர்களைக் கொண்டு மந்திரம் சொல்லி பூஜையைச் செய்து முடிக்க வேண்டும்.
பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஆகியவற்றால் பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகத்திற்குப் பிறகு உலர்ந்த வஸ்திரத்தால்  துடைத்து, சந்தனம்குங்குமம் சாத்தி, அக்ஷதை முதலானவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். நான்கு காலங்களுக்கும் நான்கு விதமாகச் சொல்லப் பட்டுள்ளன.

முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம் ஜாமத்தில் வால் கோதுமை எனப்படும் பார்லி, மூன்றாம் ஜாமத்தில் கோதுமை, நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயறு, தினை அல்லது ஏழு விதமான தான்யாட்சதையும் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், சதபத்திரம், தாமரை, கரவீரம் எனப்படும் அலரி புஷ்பங்களால் முதல் ஜாமத்திலும், தாமரை, வில்வம் ஆகியவற்றால் இரண்டாம் ஜாமத்திலும், ஆத்தி, அறுகு ஆகியவற்றால் மூன்றாம் ஜாமத்திலும், நறுமணம் கமழும் மலர்களால் நான்காம் ஜாமத்திலும், பகவானை அர்ச்சனை செய்ய வேண்டும். பகவானுக்கு நிவேதனமாக வைக்கப்பட வேண்டிய பலகாரங்களும் ஒவ்வொரு ஜாமத்துக்கும் ஒவ்வொருவிதமாகக் கூறப்பட்டுள்ளன. முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், கறி முதலானவற்றை நிவேதிக்க வேண்டும். லட்டு முதலிய பக்ஷண வகைகள் இரண்டாம் ஜாமத்தில் நிவேதிக்கப்பட வேண்டும். மூன்றாம் ஜாமத்தில் மாவால் செய்யப்பட்ட நெய் சேர்ந்த  பலகாரங்களும், பாயஸமும் நிவேதிக்கப்பட வேண்டும். நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரங்கள் நிவேதனமாக விதிக்கப்பட்டுள்ளன. பழவகைகளிலும் இந்த வேறுபாடுகள் உண்டு. முதல் ஜாமத்தில் வில்வப் பழமும், இரண்டாம் ஜாமத்தில் பலாப்பழமும், மூன்றாம் ஜாமத்தில் மாதுளம்  பழமும்நான்காம் ஜாமத்தில் எல்லாவிதப் பழங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஜாமத்திலும் பூஜை முடிந்ததும் பிராமணர்களுக்கு தக்ஷிணை முதலியன கொடுத்து அன்னமளிக்க வேண்டும். அவரவர்கள் சக்திக்கேற்பத் தானங்கள் செய்யவேண்டும். பூஜை ஆரம்பத்தில் சங்கல்பித்து ஆவாஹனம் செய்த சிவலிங்கத்தைப் பூஜை முடிந்ததும் விசர்ஜனம் செய்துவிட வேண்டும்.


சர்வாய க்ஷிதிமூர்த்தயே நம:
பாவாய ஜல மூர்த்தயே நம:
ருத்ராய தேஜோ மூர்த்தயே நம:
உக்ராய வாயு மூர்த்தயே நம:
பீமாய ஆகாயமூர்த்தயே நம:
பசுபதயே யஜமான மூர்த்தயே நம:
மஹா தேவாய ஸோமமூர்த்தயே நம:
ஈசாநாய சூர்ய மூர்த்தயே நம:

என்னும் அஷ்ட மந்திரங்களால் பூஜித்துப் புஷ்பாஞ்சலி செய்து மனோபீஷ்டத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

பூஜை முடிந்ததும் பொழுதை வீணே கழியும்படி செய்யக் கூடாது. சிவபெருமானுடைய புண்ணிய கதைகளைப் பிறர் சொல்லக் கேட்டோ, சிவநாம பஜனை செய்தோ நேரத்தைப் போக்க வேண்டும். பொழுது விடிந்ததும் நீராடி நித்திய கர்மங்களை முடித்துக்கொண்டு சிவாலயம் சென்று பகவானைத் தரிசித்துப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரி தினம் விரதம் இருந்து பூஜை செய்து அடுத்த வருடம் மகாசிவராத்திரி அன்று விரதத்தை உத்தியாபனம் செய்து முடித்துக்கொள்ள வேண்டும்.

விரத உத்தியாபனம் அன்று அலங்கார மண்டபம் செய்து அதில் பார்வதி சமேதராகப் பகவானைப் பிரதிஷ்டித்துப் பூஜை செய்யவேண்டும். ஹோமம் வளர்த்து முதலில் நவக்கிரக சாந்திக்காக நவக்கிரக ஹோமம் செய்து பின்னர் நெய், பாயசம் முதலியவற்றால் ருத்திர மந்திரம் ஜபித்து ஹோமம் செய்ய வேண்டும். முடிவில் பொன்னால் சிவபெருமானையும், வெள்ளியால் பார்வதியையும் பிரதிமைகளாகச் செய்து, சிறிய கட்டிலில் மெத்தை, தலைகாணி வைத்து அதன்மீது ஏழு வகைத் தானியங்களைப் பரப்பி பிரதிமைகளை வைத்து வேதியனுக்குத் தானம் செய்ய வேண்டும். புரோகிதருக்கு வஸ்திரம் முதலான கொடுத்துக் கௌரவிக்க வேண்டும். சக்தி உள்ளவர்கள், பால் கொடுக்கக் கூடியதும், சாதுவுமான பசுவைக் கன்றோடு, குளம்புகளில் வெள்ளியும், கொம்பிலே பொன்னும் கட்டி, வெண்கலப் பாத்திரத்தோடு தானம் செய்யலாம். பூஜை முடிந்ததும் பன்னிரண்டு பேருக்குக் குறையாது பிராம்மண போஜனம் செய்விக்க வேண்டும்.

மறுநாள் அமாவாசை அன்று பிதுர்களுக்குப் பிண்டப் பிரதானம் செய்து பின்னர் பிராமணர்களுக்கு அன்னம் அளிக்க வேண்டும். அமாவாசையில் அந்தணர்களுக்கு அன்னம் அளித்தால் அந்தப் பக்ஷம் முழுவதும் அதாவது பதினைந்து தினங்களிலும் அன்னம் அளித்த பலன் கிட்டும்.

ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment