Monday 8 June 2020

சிவ புராணம் ( 30 )


30. அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறுதல்



துரியோதனனால் சூதாட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட பாண்டவர்கள், திரௌபதியோடு நாட்டை விட்டுக் காட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒவ்வொரு இடமாகச் சஞ்சரித்துக் கொண்டு இறுதியில் துவைதவனத்தை அடைந்தனர். சூரியனால் அளிக்கப்பட்ட அக்ஷயபாத்திரம் இருந்ததால் அவர்கள் ஆகாரத்துக்குக் கஷ்டம் ஏதுமின்றி வாழ்ந்து வந்தனர்.

காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மேலும் துன்பங்கள் இழைக்க வேண்டுமென எண்ணி, துர்வாச முனிவரைத் தூண்டி, பாண்டவர்களிடம் பிக்ஷைக்குப் போகு மாறு அனுப்பினான் துரியோதனன். துர்வாசர் பதினாயிரம் சிஷ்யர்களுடன் பாண்டவர்களிடம் வந்து சேர்ந்தார்.

முனிவரைக் கண்டதும் தருமர் ஓடிவந்து வரவேற்று வணங்கினார். தருமா, நாங்கள் மிகவும் பசியோடு வந்திருக்கிறோம். எங்களுக்கு அறுசுவையோடு கூடிய உணவை அளிக்க வேண்டும்" என்று கேட்டார்.

தருமராஜன் முனிசிரேஷ்ட, நான் பாக்கியவானானேன்" என்றார். உணவை தயாராக வைத்திருங்கள். நானும், என் சிஷ்யர்களும் நீராடிவிட்டு வந்து விடுகிறோம் என்றபடி நதிக்கு நீராடச் சென்றார்.

முனிவரோ முன்கோபமுடையவர். அவர் கேட்டு முடியாதென்று மறுத்து விட்டால் அப்போதே சபித்து விடுவார். ஆகவே, முனிவர் அன்னமளிக்க வேண்டுமென்று கேட்ட போது தருமராஜன் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்.

முனிவர் நீராடச் சென்ற பிறகுதான் தருமராஜன் அந்த இக்கட்டிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் தவித்தார். முனிவர் வந்த வேளையோ அகால வேளையாகும். அவர்கள் ஏற்கனவே அன்னபானாதிகளை முடித்துக் கொண்டு, அக்ஷய பாத்திரத்தை அலம்பிக் கவிழ்த்து விட்டார்கள். அதைக் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு முறைதான் உணவைப் பெற முடியும். இப்போது என்ன செய்வது? முனிவர் திரும்பி வந்ததும் சாப்பாட்டுக்கு ஏதும் ஏற்பாடுகள் செய்யாதிருப்பதைக் கண்டு அவர்களைச் சபிக்கப் போகிறார். இந்த நிலையைத் தானே துரியோதனன் எதிர்பார்த்தான். அவ்விதம் முனிவரின் சாபத்தைப் பெறுவதற்கு முன்பு உயிரை விட்டுவிடுவதே மேல் எனத் தோன்றியது அவருக்கு. திரௌபதியோ கிருஷ்ணனைத் தியானித்து, இந்த இக்கட்டான நிலையிலிருந்து அவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமெனப் பிரார்த்தித்தாள்.
திரௌபதியின் பிரார்த்தனையைக் கேட்ட கிருஷ்ணன் அடுத்த க்ஷணம் அங்கே வந்து சேர்ந்தார். திரௌபதி நடந்ததைத் தெரிவித்து முனிவர் நதியிலிருந்து திரும்பும் நேரமாகி விட்டதென்று கண்ணீர் விட்டாள்.
திரௌபதி, வருத்தப்படாதே, உள்ளே சென்று அக்ஷய பாத்திரத்தை எடுத்துவா" என்றார் கிருஷ்ணன். சுவாமி, அதைக் கழுவி வைத்துவிட்டேனே" என்றாள் திரௌபதி. பரவாயில்லை, எடுத்துவா" என்றார் கிருஷ்ணன்.
திரௌபதி உள்ளே சென்று பாத்திரத்தை எடுத்து வந்தாள். அதை வாங்கி உன்னிப்பாக பார்த்த கிருஷ்ணன் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த சிறிய கீரையை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டார். திரௌபதி, உத்திரணியால் ஜலம் எடுத்துக் கீரையின் மேல் விடு" என்றார்.
திரௌபதி ஜலம்விட்ட மாத்திரத்திலேயே, கிருஷ்ணன் அனுக்கிரகத்தால் முனிவருக்கும் அவருடைய பதினாயிரம் சிஷ்யர்களுக்கும் தேவையான அறுசுவையோடு  கூடிய உணவு ஆசிரமத்தில் நிறைந்துவிட்டது. நீராடித் திரும்பிய முனிவர்களும் சிஷ்யர்களும் அதைப் போன்ற சுவையான உணவை இதுவரைச் சாப்பிட்டிராததால் வயிறு முட்டச் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தனர். பாண்டவர்களின் மனோபீஷ்டம் தடையின்றி நிறைவேறும் என அனுக்கிரகித்துச் சென்றார் துர்வாசர்.
முனிவர் அகன்றதும் தருமர், கிருஷ்ணனின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். கிருஷ்ணா, உன் அனுக்கிரகம் மட்டும் இல்லாதிருக்கு மானால் என் நிலைமை மோசமாகப் போயிருக்கும். துர்வாசரிடம் சாபம் பெறுவதைக் காட்டிலும் அவர் வருவதற்குள் உயிரை விட்டிருப்பேன்" என்றார்.
தருமா, எல்லாம் சிவபெருமானுடைய அனுக்கிரகம் தான். துவாரகையிலிருக்கும் போது உபமன்யு முனிவர் எனக்குச் சிவபூஜை உபதேசித்தார். வடுககிரியில் ஏழு மாதம் தீக்ஷை பெற்றுச் சிவபூஜை செய்து தியானித்தேன். சிவனும் எனக்குத் தரிசனம் தந்து சத்துருக்களை வெல்லும் சக்தியை அளித்தார். நீங்களும் சிவபூஜை செய்யுங்கள். அவர் அனுக்கிரகத்தால் உங்களுக்கு வரும் துன்பங்கள் பனிபோல் நீங்கும். எனக்கு அருளியதன் காரணமாகப் பகவான் அங்கே வில்வேசுவரர் என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்" என்றார் கிருஷ்ணன்.
ஒருநாள் வேதவியாசர், பாண்டவர்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்று நன்கு உபசரித்தார் தருமர். முனிசிரேஷ்ட, இந்தக் கானகத்தில் உள்ள வசதிகளைத் கொண்டு ஓரளவுக்குத்தான் உங்களை உபசரிக்க முடிந்தது. இதுவே அஸ்தினாபுரமாக இருந்திருந்தால் இன்னும் மேன்மையாகக் கௌரவித்திருப்போம். தங்களை நன்கு கௌரவிக்க முடியவில்லையே என வருந்துகிறோம்" என்றார் தருமர்.

தருமா ஏன் விசனப்படுகிறாய்? எனக்கு உங்கள் நிலைமை தெரியாதா என்ன? திருதராஷ்டிரன் கண்களைத் தான் இழந்தான் என்றால் அறிவையுமல்லவா இழந்திருக்கிறான். நீங்கள் யார்? துரியோதனனைப் போன்று அவன் புத்திரர்கள் தானே. அவனுக்குப் பிறக்கவில்லை, இருக்கட்டுமே. பாண்டு அவன் சகோதரன்தானே. துரியோதனாதியர் தவறு செய்து உங்களுக்குக் கொடுமைகள் பல இழைத்த போதுஅவனாவது குறுக்கிட்டுத் தடுக்க வேண்டாமா? நல்லவர்களைப் பகவான் என்றும் கைவிட மாட்டார். அதர்மத்தின் கை ஓங்கியிருந்தாலும் முடிவில் தர்மமே ஜெயிக்கும். நீங்கள் சிவபூஜை செய்யுங்கள். கைலாசநாதன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்" என்றார் வியாசர்.

தருமர் அவரைப் பணிந்து ஸர்வக்ஞ, தாங்கள் கூறிய வார்த்தைகளால் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். கிருஷ்ணனும் சிவபூஜை செய்யுமாறு சொன்னார். தாங்களோ மகா யோகீஸ்வரர். தாங்கள் வந்திருப்பதே எங்கள் நல்ல காலத்தைக் குறிக்கிறது. தாங்களே எங்களுக்குச் சிவபூஜையை உபதேசிப்பதுதான் உத்தமம்" என்றார்.
வியாஸர் மனமகிழ்ந்தவராய், பாண்டவர்கள் ஐவரில் அர்ச்சுனனே சிவபூஜை செய்யத் தகுந்தவன் எனத் தெரிவித்தார். அர்ஜுனனை அழைத்து அவனுக்கு முதலில் இந்திர மந்திரத்தை உபதேசித்துப் பின்னர் சிவபூஜையை உபதேசித்தார்.
அர்ஜுனா, உன்னை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால், அந்த பூஜையின்போது காட்ட வேண்டிய மன உறுதி உன்னிடம் உள்ளது. உன் பூஜை கெடுப்பதற்காகவே பலர் தோன்றுவார்கள். இடையூறுகள் நேரக்கூடும். அப்போதெல்லாம் மனம் தளராது இருக்க வேண்டுவது அவசியம். முதலில் இந்திரனைத் திருப்தி செய்து பின்னர் சிவபூஜையைத் தொடங்கு" என்ற வியாசர், பிறர் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க ஓர் அரிய மந்திரத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்தார்.
அர்ஜுனன் வியாஸரையும் தருமரையும் வணங்கி அவர்களது ஆசிபெற்றுப் புறப்பட்டான். கிருஷ்ணாநதி தீரத்தில் இந்திரகீல பர்வதத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான். வியாஸர் தெரிவித்தது போன்று முதலில் இந்திரனை வணங்கி விட்டுச்  சிவபூஜையைத் தொடங்கினான். பஞ்சஸூத்ரப் பிரகாரம் மண்ணால் சிவலிங்கம் அமைத்து அதற்கு அபிஷேகம் முதலான செய்து மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்தான். பின்னர் ஒரு காலை மடக்கிக் கொண்டு, மற்றொரு காலை ஊன்றி நின்றபடி சிவபெருமானைத் தியானிக்கத் தொடங்கினான்.

நாட்கள் செல்லச் செல்ல அர்ஜுனனின் தவம் கடுமையாகியது. அவனிடமிருந்து யோகாக்கினி புறப்பட்டு விண்ணில் சென்று தேவலோகத்தை எட்டியது. தேவர்களால் அந்த உஷ்ணத்தைத் தாங்க முடியவில்லை. இந்திரனிடம் சென்று தெரிவித்தனர். இந்திரனுக்கு பரம சந்தோஷம். அவன் மகன் அல்லவா அர்ஜுனன். மகனுக்கு அனுக்கிரகம் செய்ய அப்போதே புறப்பட்டான் இந்திரன்.

தொண்டு கிழமாக வேடம் பூண்டு, நடக்க முடியாது தட்டுத் தடுமாறியபடி அர்ஜுனனிடம் வந்தான் இந்திரன். யாரப்பா நீ? யாரைக் குறித்து இவ்வளவு கடுமையாகத் தவம் செய்கிறாய்?" என்று கேட்டான்.

அர்ஜுனனுக்கு வந்திருப்பது யார் என்பது தெரியவில்லை. பெரியவர் கேட்கிறாரே என்று, தான் அங்கு வந்து தவம் மேற்கொண்ட நோக்கத்தைத் தெரிவித்தான்.
நல்ல வேலை செய்தாய் போ. இந்த வயதில் எத்தனையோ குதூகலமாக இருக்க வேண்டிய நீ, இப்படிக் கடுமையான தவத்தை மேற்கொள்ளலாமா? போக பாக்கியங்களோடு வாழத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அதை அடைய இத்தனைக் கடுமையாக தவம் மேற்கொள்ள வேண்டாம். இந்திரனைக் குறித்துத் தவம் செய்தால் போதும். விரைவிலேயே  உனக்கு அவன் அனுக்கிரகம் கிட்டும்’’ என்றான் கிழவரின் வடிவிலே வந்திருந்த இந்திரன். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அர்ஜுனனுக்கே கோபம் வந்துவிட்டது
பெரியவரே, இன்னொரு தரம் அம்மாதிரி சொல்லாதீர்கள்சிவபெருமானின் தரிசனம் கிட்ட வேண்டுமென்று நான் எண்ணி இத்தவத்தை மேற்கொண்டுள்ளேன். அதை மாற்ற முடியாது. என்னைவிட எத்தனையோ வருடங்கள் மூத்தவர் என்ற காரணத்தால் நீங்கள் கேட்டதற்கு நான் பதிலளித்தேன். இனி ஒருகணமும் இங்கே தங்கி என் தவத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்" என்று கடிந்து கொண்டான்.
அடுத்த க்ஷணம் அங்கே முதியவரைக் காணவில்லை. தேஜோ மயமாக இந்திரன் நின்றிருந்தான். இந்திரனைக் கண்டதும் அர்ஜுனன் இரு கைகளையும் கூப்பி அவனை வணங்கினான். தேவேந்திரா, வந்திருப்பது தாங்கள் என்பதை உணராமல் கடிந்து பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று வேண்டினான்.
அர்ஜுனா, வருத்தப்படாதே. உன் மன நிலையைச் சோதிக்கவே நான் இவ்வாறு மாறு வேடத்தில் வந்தேன். நீ மேற்கொண்டிருக்கும் காரியம் தடங்கலின்றி நிறைவேறும்" என்று அருளிச் சென்றான் இந்திரன்.
சிவபெருமானைக் குறித்து அர்ஜுனன் கடும் தவம் இயற்றி வருகிறான் என்ற செய்தியைக் கேட்ட துரியோதனன், அடக்க முடியாத ஆத்திரம் கொண்டான். அர்ஜுனன் மேற் கொண்டிருக்கும் தவத்தைக் கலைத்து அதன் பலனை அடைய முடியாதபடி செய்ய வேண்டுமென்று எண்ணினான். உடனே மூகன் என்னும் அசுரனை அழைத்து, காட்டிலே கடுந்தவம் இயற்றிவரும் அர்ஜுனனிடம் சென்று அவன் தவத்தைக் கலைத்து இடையூறு செய்யுமாறு அனுப்பினான்.

இதைப்பற்றி அறிந்த தேவேந்திரன் கைலாசநாதனிடம் ஓடினான். பிரபோ, அர்ஜுனன் தங்களைக் குறித்துக் கடுமையாகத் தவம் செய்கிறான். அவன் தவத்தைக் கலைக்கத் துரியோதனாதியர்கள் அரக்கனை ஏவி விட்டிருக்கின்றனர்" என்று முறையிட்டான்.

இந்திரா, அர்ஜுனனுக்கு ஆபத்து வராது காப்பது என் பொறுப்பு" என்ற ஈசன் தேவியுடன் அப்போதே வேடுவவேடம் தாங்கி இந்தரகீல பர்வதத்தை அடைந்தார். துரியோதனனால் அனுப்பப்பட்ட மூகன், பன்றியாக வடிவம் கொண்டு வனத்திலுள்ள மரங்களையெல்லாம் சாய்த்துக் கொண்டும், மண்ணைக் கிளறி நாற்புறமும் வாரி இறைத்துக் கொண்டும் அட்டகாசத்துடன் அர்ஜுனனிடம் வந்தான்.

கோர உருவத்தோடு வரும் பன்றியைக் கண்ட உடனேயே அது சாதாரணக் காட்டு விலங்கு அல்ல என்பதை உணர்ந்தான் அர்ஜுனன். தவத்தைக் கெடுத்து இடையூறு விளைவிக்கும் நோக்கத்தோடு வந்திருக்கும் சத்துரு என்பதைத் தெரிந்து கொண்டான். ஆகவே, அவன் சிறிதும் தயக்கமின்றி காண்டீபத்தில் நாணேற்றி அம்பை எய்தான். அவன் எய்த அம்பு பன்றியின் மூக்கிலே பாய்ந்து அதன் வால்புறத்திலே வெளிப்பட்டு அம்பறாத்  தூணியை அடைந்தது.

அதே நேரத்தில் அங்கு வந்த கைலாசநாதனும் அர்ஜுனனை நெருங்கும் பன்றியைத் தூரத்தில் இருந்தபடி அம்பால் அடித்தார். அவரால் எய்யப்பட்ட அம்பு பன்றியின் வால்புறத்தில் பாய்ந்து மூக்கின் வழியாக வெளிப்பட்டு பூமியில் விழுந்தது. அந்த க்ஷணமே மூகன் பயங்கரமாக அலறிக் கொண்டு தரையில் விழுந்து உயிர் விட்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம் சிவகணங்களில் ஒருவன் பன்றியின் பக்கத்தில் விழுந்து கிடக்கும் அம்பை எடுத்துச் செல்ல அங்கே வந்தான். அவனைக் கண்டதும் அர்ஜுனன் முகம் சிவந்தவனாய், யாரடா நீ? எங்கே வந்தாய்?" என்று அதட்டினான்.

ஐயா, எங்கள் தலைவர் இந்தப் பன்றியை அம்பால் அடித்துக் கொன்றார். தான் கொன்ற பன்றியையும் அதன் பக்கத்தில் விழுந்து கிடக்கும் அம்பையும் எடுத்து வருமாறு அனுப்பினார். அவற்றை எடுத்துச் செல்ல வந்துள்ளேன்" என்றான் அவன்

அர்ஜுனன்கடகடவென்று சிரித்தான் என்ன சொன்னாய்? பன்றியைக் கொன்றது உங்கள் தலைவரா? நானல்லவா பன்றியை அடித்து வீழ்த்தியது" என்றான். நீங்கள் சொல்வது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காட்டிலே வேட்டையாட வந்தோம் நாங்கள். தூரத்தில் வரும் போதே பன்றி உங்கள் மீது பாயத் தயாராக இருப்பதைக் கண்டோம். நீங்கள் வில்லில் அம்பு பூட்டி எய்வதற்குள் பன்றி உங்கள் மீது பாய்ந்து விடும் என்பதை உணர்ந்து எங்கள் தலைவர் பன்றியை அடித்தார். அம்பிலே எங்களது சின்னம் தெரியக்கூடுமே. எங்களுடைய பொருளை எடுத்துச் செல்வதில் தவறென்ன இருக்கிறது?" என்று கேட்டான் அவன்.

அம்பை எடுத்துச் செல்ல நான் அனுமதிக்க மாட்டேன்" என்றான் அர்ஜுனன். ஏன்?" நான் ஒரு க்ஷத்திரியன். எந்த க்ஷத்திரியனும் தன் முன்பு வந்து விழுந்த அம்பைப் பிறர் எடுக்க அனுமதிக்க மாட்டான். இது என்னைச் சேர்ந்தது" என்றான் அர்ஜுனன். சிவபெருமானின் ஆளோ அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான்.

உனக்கு இந்த அஸ்திரம் வேண்டுமா? அப்படியானால் என்னோடு வா. என் தலைவரிடம் அழைத்துச் செல்கிறேன். அவரிடம் வந்து கேள். இந்த அஸ்திரமல்ல; இதைப் போன்று இன்னும் அதிக சக்தி வாய்ந்த அஸ்திரங்களை உனக்குக் கொடுப்பார். தன்னிடம் யாசிப்பவர்களின் மனோபீஷ்டத்தை ஒருபோதும் நிறைவேற்றத் தயங்கமாட்டார்" என்றான் அவன்.

அர்ஜுனன் சீற்றம் கொண்டான். அடே, என்ன வார்த்தை சொன்னாய்? உன்னோடு வந்து உன் தலைவனிடம் நான் அஸ்திரங்களை யாசிக்க வேண்டுமா? வேண்டுமானால் உன் தலைவரை இங்கு வந்து என்னிடம் யாசித்து இந்த அஸ்திரத்தைப் பெற்றுச் செல்லுமாறு சொல்" என்றான்.
அது நடக்காத காரியம்" என்றான் அவன்.

அப்படியானால் நானும் கொடுக்கத் தயாராக இல்லை. என்னிடம் போர் செய்து வெற்றி கொண்ட பிறகே இந்த அஸ்திரத்தை எடுத்துச் செல்லலாம்" என்றான் அர்ஜுனன் கடுங்கோபத்தோடு.

அந்த ஆசாமி திரும்பி சிவபெருமானிடம் ஓடி வந்தான். பிறகு அங்கிருந்து அடித்த பந்து போல அர்ஜுனனிடம் திரும்பி வந்தான்.

ஐயா, எமது தலைவர் பெரும் கோபத்தோடு சண்டைக்குத் தயாராகி விட்டார். உங்களைவிட அவர் சகல விதங்களிலும் வல்லமை உடையவர். ஏன் இந்தப் பிடிவாதம்? பேசாமல் அம்பைக் கொடுத்து விடுங்கள். இடையூறின்றி உங்கள் தவம் முடிவுறும். இல்லையேல் வீணில் உயிரை இழக்க நேரிடும்" என்றான்.

அர்ஜுனன் கொஞ்சமும் கலங்கவில்லை. அப்படியா? நானும் சண்டைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவியுங்கள். க்ஷத்திரியன் தான் சொன்ன வாக்கை மீறமாட்டான். உங்கள் தலைவன் என்னைவிடப் பலசாலியாக இருக்கட்டும். அவனால் எனக்கு அழிவு ஏற்படட்டும். அதற்காக நான் கலங்கவில்லை. உங்கள் வார்த்தைக்குப் பணிந்து அம்பைக் கொடுத்து விடுவேனாகில், உயிருக்குப் பயந்து நடந்து கொண்டதாக என் சகோதரர்கள் ஏளனம் செய்வார்கள். அதைவிட யுத்தத்திலே உயிரை இழப்பது எவ்வளவோ மேல்" என்றான்.

அவன் ஈசனிடம் திரும்பிச் சென்று அர்ஜுனன் கொஞ்சமும் மனம் கலங்காது சண்டைக்குத் தயாராக இருப்பதைத் தெரிவித்தான். ஈசன் தன் கணங்களோடு யுத்தத்துக்கு வந்தார்.

கையில் வில்லோடு கம்பீரமாக வந்து நின்ற வேடர் தலைவனையும் அவனோடு வந்திருந்த ஆட்களையும் கண்டதும் அர்ஜுனன் மனத்தில் சிவபெருமானைத் தியானித்தான்.

பிரபோ, தங்களைக் குறித்துத் தவம் இயற்றி வரும் எனக்கு இடையூறுகள் விளைவித்து என் தவத்தைக் கெடுக்க வந்துள்ளனர். பிரபோ, சர்வேசுவரா, தாங்கள்தான் என் விஷயத்தில் கருணை கொண்டு எனக்கு வரும் ஆபத்துக்களை நீக்க வேண்டும்" என்று பிரார்த்தித்து காண்டீபத்தைக் கையிலெடுத்தான்.

அர்ஜுனனின் பிரார்த்தனையை அறிந்து சிவபெருமான் மெல்லச் சிரித்தபடி, பார்த்து யுத்தம் செய்யுமாறு, சைகை செய்தார். சிவகணங்கள் பலவித அஸ்திரங்களை எய்து அர்ஜுனனைத் திக்குமுக்காடச் செய்தனர். அர்ஜுனனும் சரமாரியாக அம்புகளை விடுத்துக் கணங்கள் விடுத்த அஸ்திரங்களைத் தடுத்து அழித்தான்.

கணங்கள் களைத்துப் போயினர். அவர்கள் கை களைக்கும் நேரத்தில் அர்ஜுனனின் கை ஓங்கியது. அஸ்திரங்களைப் பல வகையாக எய்து கணங்களைச் சிதறி ஓடச் செய்தான்.

கணங்கள் சிதறி ஓடுவதைக் கண்ட சிவபெருமான் தாமே நேரிடையாக போரிட வந்தார். அர்ஜுனன் பயங்கர அஸ்திரங்க ளால் வேடுவர் தலைவனாக வந்திருக்கும் பகவானை அடித்தான். ஈசனோ, அவன் விடும் அஸ்திரங்களைத் தம்மை நெருங்கும் முன்னரே அழித்து அர்ஜுனனையே தாக்கினார். அவன் அணிந்திருந்த கவசத்தையும் அறுத்துத் தள்ளினார்.

பின்னர் இருவரும் வில்லையும் அம்புகளையும் எறிந்து விட்டுத் துவந்துவ யுத்தம் செய்தனர். ஒருவரோடு ஒருவர்  வந்து  மோதும்போது பூமியே அதிர்ந்தது. தேவர்கள் ஆகாசத்தில் வந்து கூடினர். பயங்கரமாகப் போரிடும் அவர்களைப் பார்த்து, இது எந்த அழிவில் போய் நிற்கப் போகிறதோ, என்று பயந்தனர்.

அர்ஜுனனுக்கு அருள வேண்டிய சமயம் வந்து விட்டதை அறிந்த சர்வேச்வரன் தாம் சிறிது களைத்துப் போவதுபோல் நாடகமாடினார். இதுவே எதிரியை வீழ்த்தச் சமயம் என்பதைக் கண்ட அர்ஜுனன் சட்டென்று தரையில் கிடந்த காண்டீபத்தைக் கையிலெடுத்து அதனால் பகவானின் தலையில் ஓங்கி  அடித்தான்.

அர்ஜுனன் பகவானை அடித்த அடி பகவானின் தலையில் மட்டுமா விழுந்தது? அண்டசராசரங்களிலும் உள்ள சகலமான ஜீவராசிகளுக்கும் அந்த அடி விழுந்தது. விண்ணிலே கூடியிருந்த தேவர்களுக்கும் விழுந்தது. ஆசிரமத்திலே இருந்த தருமர் முதலானோருக்கும் விழுந்தது. ஏன், அஸ்தினாபுரத்தில் இருந்த துரியோதனாதியருக்கும் கூட அடி விழுந்தது. பகவானை அடித்த அர்ஜுனனின் தலையிலும் அந்த அடி விழுந்தது.

திடுக்கிட்ட அர்ஜுனன் எதிரே இருக்கும் வேடனைப் பார்த்தான். வேடனைக் காணவில்லை. அங்கே சர்வேச்வரனான சிவபெருமான் புன்னகை பூத்தவராய் நின்றிருந்தார். அப்போதுதான், தன்னுடன் சண்டைக்கு வந்தது கையிலாசநாதனே என்பதை அவன் உணர்ந்தான்.

காண்டீபத்தைத் தூர எறிந்தான் அர்ஜுனன். இரு கைகளையும் கூப்பியவனாய்த் தரையில் மண்டியிட்டான். பிரபோ, தாங்கள் யார் என்பதை உணராது அடியேன் அபசாரம் இழைத்துவிட்டேன். என்னை மன்னித்து அருள வேண்டும்" என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்தான்.

சிவபெருமான் இருகைகளாலும் அவனை வாரியெடுத்து அணைத்துக் கொண்டார். அர்ஜுனா, வருத்தப்படாதே! நீ பரமபக்தன். உன்னைப் பரீக்ஷிக்கவே நான் இந்த வேடத்தில் வந்தேன். என்னை அடித்ததற்காக வருத்தம் வேண்டாம். உன் பக்தியை உணர்த்தவே அந்த அடியை வாங்கிக் கொண்டேன். அது புஷ்பத்தால் அடித்தது போலவே எனக்கிருந்தது. உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். தருகிறேன்" என்றார்.

அர்ஜுனன் சிவனைப் பலமுறை வலம் வந்து வேதங்களால் அவர் உள்ளம் மகிழத் துதித்தான். ஒருவராலும் ஜெயிக்க முடியாத பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனனுக்கு அளித்தார் ஈசன்.

அர்ஜுனா, இந்த அஸ்திரத்தால் நீ சத்துருக்களை வென்று சுகபோக வாழ்வை அடைவாயாக. உங்களுக்கு எந்தச் சமயத்திலும் கிருஷ்ணனின் சகாயம் கிடைக்கும். கிருஷ்ணன் என்னுடைய அம்சமே ஆவான்" என்று அனுக்கிரகித்து மறைந்தார்.

பாசுபதாஸ்திரத்தைப் பெற்ற அர்ஜுனன் மகிழ்ச்சியோடு சகோதரர்களிடம் திரும்பி நடந்தவற்றை விவரித்தான். அவர்களும் பகவானின் கருணாகடாக்ஷத்தை எண்ணி எண்ணி அவரைப் போற்றிக் கொண்டாடினர்.

ஹரி ஓம் !!


No comments:

Post a Comment