Saturday 27 June 2020

சிவ புராணம் ( 49 )


49. அஷ்ட வக்கிரரின் மன உறுதி





அஷ்ட வக்கிரர் என்னும் முனிவர்  இருந்தார். அவர் வதான்யன் என்பவரின் புத்திரியான பிரபா என்பவளைக் கண்டார். சகல நற்குணங்களோடும் அதிரூபத்தோடும் விளங்கிய அவளை மணக்க ஆசைப்பட்டார். வதான்யனிடம் சென்று அவன் புத்திரியைத் தனக்கு மணம் செய்து தருமாறு கேட்டார். அவன் முனிவரைப் பார்த்து, நீர் வடதிசைக் கன்னிகையைக் கண்டு திரும்பி வருவீர்களானால் என் புத்திரியை மணம் செய்து தருகிறேன்" என்றான்.

அக்கன்னிகையை நான் எங்கே காண்பேன்? அங்கு செல்லும் மார்க்கம் எது?" என்று கேட்டார் முனிவர். ஹிமாசலத்தைக் கடந்து குபேரப் பட்டணத்தை அடைய வேண்டும். அதன் பின்னர் அதையும் கடந்து ருத்திர லோகத்தையும் தாண்டிச் செல்வீரானால் அங்கோர் அழகிய வனம் இருக்கக் காண்பீர்கள். அவ்வனத்தில் பேரழகியாய் விளங்கும் மங்கை ஒருத்தி இருக்கிறாள். அவளே வடதிசைக் கன்னி எனப்படுபவள். அவளைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்தால் என் பெண்ணை மணம் செய்து தருகிறேன். சத்தியம் தவறாது போய் வரவேண்டும்" என்றான் வதான்யன்.

முனிவர் அதற்குடன்பட்டுத் தாம் போய் வருவதாகவும் அதேபோல் சத்தியம் தவறாது அவரும் புத்திரியை மணம் செய்து கொடுக்க  வேண்டும் என்று சொல்லிப் புறப்பட்டார். இமாசலத்தைத் தாண்டிச் செல்கையில் மந்தாகினி நதி தீரத்தை அடைந்து அதன் கரையில் நீராடி அனுஷ்டானத்திலிருந்த முனிவரை யக்ஷர்கள் கண்டு வணங்கினர்.
முனிசிரேஷ்ட, தங்களை எமது தலைவன் குபேரன் சந்தித்துப் பேச விரும்புகிறார். ஆகவே தாங்கள் சற்று நேரம் இங்கு தங்கியிருக்க வேண்டும்" என்று வேண்டினர். அவ்வாறே சிறிது நேரத்துக்கெல்லாம் குபேரன் அங்கு வந்து முனிவரைப் பணிந்து வணங்கித் தன் பட்டணத்துக்கு வந்து பூஜையை ஏற்க வேண்டுமென்று கோரினான். முனிவர் குபேரனோடு அவன் பட்டணத்துக்குச் சென்றார். அங்கே அவருக்கு ராஜோபசாரம் நடந்தது. அவரைத் தமது சபையில் உட்காரவைத்து அழகிய மாதர்களைக் கொண்டு நடனம் முதலானவற்றால் மகிழச் செய்தான். தேவ வருஷம் ஒன்று ஓடி விட்டது.
அஷ்டாவக்கிரர் தான் புறப்பட்டு வந்த காரியத்தைத் தெரிவித்துப் புறப்பட்டுச் செல்ல விடைகொடுக்குமாறு கேட்டார். அங்கிருந்து புறப்பட்ட முனிவர் வதான்யன் தெரிவித்த மனோகரமான வனத்தை அடைந்தார். அதன் மத்தியில் ஓர்  ஆசிரமத்து வாசலில் அதியற்புத ரூபலாவண்யங்களைக் கொண்ட ஏழு அழகிகளைக் கண்டார். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவர்கள் எழுவரும் கைகூப்பி அவரை வணங்கி ஸ்வாமி, தாங்கள் எங்கள் கிருகத்துக்கு எழுந்தருளி எங்களைக் கிருதார்த்தர்களாக்க வேண்டும்" என்று பிராத்தித்தனர். அவர்கள் அழைப்பைத் தட்ட முடியாது அவர்களோடு உள்ளே சென்றார்.

அங்கே மஞ்சம் ஒன்றில் சர்வாலங்கார பூஷிதையாக  வனிதை ஒருத்தி படுத்திருக்கக் கண்டார். முனிவரைக் கண்டதும் அவள் துள்ளியெழுந்து அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தாள். முனிவர் அவளை ஆசீர்வதித்தார். பின்னர் அவள் முனிவரை அழைத்துச் சென்று உயரிய ஆசனம் கொடுத்து பழவகைகளைக் கொண்டு வந்து வைத்து உபசரித்தாள்.

சற்று நேரம் சென்றதும் முனிவர் அவர்களைப் பார்த்து பெண்களே, எனக்குக் களைப்பாக இருக்கிறது. சிறிது நேரம் படுக்க வேண்டும். உங்களில் ஒருத்தி மட்டும்  இங்கிருந்து எனக்கு விசிறி கொண்டு பணிவிடை செய்தால் போதும். மற்றவர்கள் உங்கள் இருப்பிடத்துக்குப் போகலாம்" என்றார்.

எழுவரும் போய்விடவே, அங்கிருந்த ஒருத்தி மட்டும் முனிவருக்கு பணிவிடை செய்து வந்தாள்.

இரவு வந்தது. முனிவர் தமக்கு நித்திரை வருகிறது என்றும், அவளை வேறு படுக்கையில் படுத்து உறங்குமாறும் தெரிவித்தார். அவள் சற்றுத் தள்ளியிருந்த மஞ்சத்தில் படுத்தாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. விரகத்தால் வருந்தியவளாய் முனிவரை நெருங்கி தன்னை மகிழ்ச்சி அடையச் செய்யுமாறு வேண்டினாள். அவரோ கட்டை போல அவளுக்கு முகம் கொடுத்துப் பேசாது படுத்திருந்தார். அவள் பலவாறு அவருக்கு ஆசை காட்டினாள். அவள் விருப்பத்தை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அவருக்கு சகல சுகபோகங்களையும் தான் உண்டாக்கச் செய்வதாக கூறினாள். விரகத்தால் வேதனைப்படும் ஒரு பெண் வந்து  வேண்டும்போது அதைப் பூர்த்தி செய்வதால் அவருடைய தபோ பலத்துக்கு பங்கம் எதுவும் நேராது என்று பலவாறாக எடுத்துக் கூறினாள்.

முனிவரோ, அவள் விருப்பத்துக்குக் கொஞ்சமும் இணங்க வில்லை.

அழகியே, என் விஷயத்தில் உன் விருப்பம் நிறைவேறப் போவதில்லை. நான் பிற ஸ்திரீகளைக் கையால் தொடுவதில்லை என்ற விரதத்தில் உள்ளவன். எத்தனையோ தபம் செய்து யோக பலத்தைப் பெற்றாலும் குலம் விளங்கப் புத்திரனில்லா விட்டால் பிரயோசனமில்லை. ஆகவே சந்ததி வளர ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்துள்ளேன். கல்யாணம் செய்து கொள்ளப் பெண்ணையும் பார்த்தாகி விட்டது. ஆகவே, என்னைத் தொந்தரவு செய்வதால் உன் விருப்பம் ஈடேறப் போவதில்லை" என்றார் முனிவர்.

அவளோ விடவில்லை. அவர் பாதங்களில் விழுந்து தன்னை ஏற்றுக் கொண்டாக வேண்டுமென்று மன்றாடினாள். தன் விருப்பத்தை ஈடேற்றாவிடில் பெரும் பாவம் சூழுமென்று தெரிவித்தாள்.

பெண்ணே, உன் சாகசங்களுக்கு நான் அடிமையாக மாட்டேன். ஒரு பெண்ணை மணக்க விரும்பி அத்திருமணத் துக்கு ஏற்பட்டுள்ள தடையை நீக்கவே நான் இங்கே வந்தேன். அப்படியிருக்க அதன் நடுவே நான் இன்னொரு  பெண்ணை மணப்பது என்பது இயலாத காரியம். உன் விருப்பத்துக்குப் பணியாவிடில் என்னைப் பாபம் சூழுமென்று தெரிவித்தாய். அந்தப் பாபம் என்னை ஒருக்காலும் சூழாது. மாறாக உன் இச்சைக்கு அடிபணிந்தேனானால்தான் என்னைப் பாபம் சூழும்" என்றார் முனிவர்.

அவரை எந்த விதத்திலும் மயக்க முடியாதென்பதைக் கண்ட அவள் முனிவருக்கு தன் தெய்வீக வடிவத்தைக் காட்டி, சுவாமி, நான்தான் நீங்கள் காண வந்திருக்கும் வட திசைக் கன்னி என்பவள். உமது மன உறுதியைப் பரிசோதிக்கவே நான் இவ்வாறு உம்மைப் பரிசோதித்தேன். வதான்யனும் உமது மன உறுதியை அறியவே என்னிடம் அனுப்பினார். நீங்கள் அவர் குமாரத்தியை மணந்து சத் புத்திரனைப் பெற்று க்ஷேமமாக இருப்பீர்" என்று அருளினாள்.

அங்கிருந்து புறப்பட்ட அஷ்டவக்கிரர், வதான்யனை அடைந்து அவனிடம் நடந்த விருத்தாந்தங்களைக் கூறிப் பிரபாவை மணம் செய்து கொடுக்குமாறு கேட்டார். அவன் அவரது இந்திரிய நிக்கிரகத்தைப் பெரிதும் பாராட்டி அவருக்குத் தன் புத்திரியைத் திருமணம் செய்து கொடுத்தார்.


ஹரி ஓம்  !!!













No comments:

Post a Comment