Wednesday 17 June 2020

சிவ புராணம் ( 39 )


39. அமிர்தம் கடைதல்




முன்பு ஒரு சமயம் அரக்கர்கள் வலிமை மிகுந்து விளங்கினார்கள். அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தி அவர்களைப் பல கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள். தேவர்கள் ஒன்று கூடிப் பிரம்மதேவனைச் சரண் அடைந்தார்கள்.

பிரபோ, தாங்கள்தான் எங்களை ரக்ஷிக்க வேண்டும். அரக்கர்கள் நாளுக்கு நாள் வலிமை கொண்டு எங்களை விரட்டி வருகிறார்கள். அவர்களை எதிர்த்து தாக்கும் சக்தி எங்களுக்கு இல்லை. எங்கள் மீது கருணை கொண்டு அரக்கர்களை வெல்லும்  சக்தியும், அழிவில்லாத வாழ்வையும் அளிக்க வேண்டும்" என்று வேண்டினர்.

தேவர்களே, உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற என் ஒருவனால் மட்டும் முடியாது. பாற்கடலில் சயனித்திருக்கும் விஷ்ணுவையும் கேட்போம்" என்று சொல்லிப் பிரம்மதேவன் அவர்களை விஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார்.
அவர்கள் வேண்டுகோளைக் கேட்ட விஷ்ணு, தேவர்களே, அரக்கர்களை வெல்லும் சக்தியும், நித்தியத்துவமும் பெறுவதற்கு ஓர் உபாயமிருக்கிறது. கடலில் உள்ள அமிர்தத்தை வெளிப்படுத்தி அதைப் பருகினால் உங்களுக்கு அழிவு என்பதே இல்லாது போய் விடும். ஆயினும் உங்களால் மட்டுமே இக்காரியத்தைச் செய்ய முடியாது. உங்கள் சகோதரர்களாகிய அசுரர்களும் இதற்கு பரிபூரணமாக ஒத்துழைக்க வேண்டும்" என்றார்
தேவர்களின் முகம் வாட்டமடைந்தது.

பிரபோ, அசுரர்களைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டால் அவர்களும் அமிர்தத்தில் பங்கு கேட்கக்கூடுமே. அழிவற்ற வாழ்வை அசுரர்களும் அடைந்துவிட்டால் பிறகு எங்கள் கதி?" என்றனர் வேதனையோடு.

நீங்கள் அவர்களையும் உதவிக்கு அழைத்து வாருங்கள். பிறகு நடப்பதை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்றார் நாராயணன்.

 தேவர்கள் ஆனந்தத்தோடு அசுரர்களிடம் ஓடினர்.

அன்புமிக்க சகோதரர்களே, வாருங்கள். நாம் அழிவற்ற வாழ்வை அடைய சமுத்திரத்திலிருந்து அமிர்தத்தைக் கடைந்து எடுப்போம்" என்று அழைத்தனர்.

அழிவற்ற வாழ்க்கையை அடையும் மார்க்கத்தைக் கேட்டதும் அசுரர்கள் தேவர்களோடு தாங்கள் கொண்டிருந்த விரோதத்தை மறந்தனர். அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்தனர்.

மந்திர மலையைக் கொண்டு வந்து மத்தாக நிறுத்தினர். வாசுகி தாம்புக் கயிறாக மாறியது. தேவர்கள் பாம்பின் வால் பக்கத்திலே நின்றார்கள். அசுரர்கள் தலைப்பக்கத்தில் நின்று வாசுகியைப் பிடித்துக் கொண்டனர். வால் பக்கத்தில் நிற்பதை அவர்கள் விரும்பவில்லை. மதிப்புக் குறைவு என்று தலைப் பக்கமே தங்களுக்கு வேண்டுமெனக் கேட்டனர்.

இருதரப்பினரும் மலையைக் கடையத் தொடங்கினர். நீரிலே மலை சரியாக நில்லாது அடிக்கடி சாய்ந்தது. விஷ்ணு கூர்மமாக உருவெடுத்து மலையின் கீழ் சென்று அதைத் தமது முதுகிலே தாங்கிக் கொண்டார். அதன்பின் மலை சாயாது நின்றது.

தேவர்களும் அசுரர்களும் உற்சாகமாக மாறி மாறி வாசுகியை இழுத்துக் கடைந்தனர். நாட்கள் நகர்ந்தனவே ஒழிய கடலிலிருந்து அமிர்தம் வெளிவரவில்லை. தேவர்கள் அசுரர்களை உற்சாகப்படுத்தினர். தற்போது சிரமமாக இருந்தாலும் அமிர்தம் கிடைத்து விட்டால் அப்புறம் அழிவே இல்லையே. ஆகவே அவர்களும் சிரமத்தைப் பொருட்படுத்தாது மலையைக் கடைந்தனர்.

வாசுகியினால் பொறுக்க முடியவில்லை. மூச்சுவிடத் திணறினாள். தன்னுடைய ஆயிரம் முகங்களிலிருந்தும் விஷத்தைக் கக்கினான்.

தலைப்புறமிருந்த அசுரர்களால் விஷத்தின் வேகத்தைத் தாங்க முடியவில்லை. அவர்கள் மேனி கருமை அடைந்தது. பிடியை விட்டுவிட்டு நாற்புறமும் ஓடினர். தேவர்களும் விஷப்புகையால் திண்டாடினார்கள்.

பிரபோ, க்ஷீராப்தி நாதா!..." என்று விஷ்ணுவைத் துதித்தார்கள்.

விஷ்ணு வெளிப்பட்டு அவர்களைப் பயப்படாதிருக்குமாறு செய்து, விஷத்தைக் கட்டுப்படுத்த முயன்றார். அவராலும் முடியவில்லை. விஷம் பட்டதால் அவருடைய உடலும் கருமையாகிவிட்டது.

பிரம்மதேவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாராயணனாலேயே விஷத்தின் கடுமையைக் குறைக்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் பாடு ஆபத்தாகி விடாதா? பயந்து போய் தேவர்களை அழைத்துக் கொண்டு கையிலயங்கிரிக்கு ஓடினார்.

பிரபோ, சர்வேசா, அமிர்தம் பெறும் நிமித்தம் பாற் கடலைக் கடையும் போது வாசுகி கடுமையைத் தாங்கமுடியாது ஆயிரம் முகங்களாலும் விஷத்தைக் கக்கி விட்டாள். அதன் வேகத்தை ஒருவராலும் தாங்கமுடியவில்லை. பிரபோ, சகல புவனங்களும் அழிந்து விடும் எனத் தோன்றுகிறது. தாங்கள் தான் எங்களை ரக்ஷிக்க வேண்டும்" என்று வேண்டினர்.

சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தைத் தம் கையில் ஆகர்ஷித்துக் கொண்டார்.

தேவர்களே, இப்போது என்ன செய்வது? விட்டு விடட்டுமா? அல்லாது நானே சாப்பிட்டு விடட்டுமா? " என்று கேட்டார்.
மகேச்வரா, தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. விஷத்தை வெளியிட்டால் மீண்டும் நாசம் அல்லவா உண்டாகும்" என்றனர் தேவர்கள்.
ஈசன் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தபடி உள்ளங்கையிலிருந்த கொடிய விஷத்தை அப்படியே விழுங்கினார். பக்கத்திலிருந்த பார்வதி சட்டென்று ஈசனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டார்.
நாதா, என்ன காரியம் செய்து விட்டீர்கள், அண்ட சரா சரங்களும் தங்கள் உதரத்தில் அடக்கமில்லையா? விஷத்தை விழுங்கி விட்டீர்களே!" என்று பதைபதைத்துக் கேட்டாள்.
தேவியின் கைப்பட்ட மாத்திரத்திலேயே விஷம் கீழிறங்காது தொண்டையிலேயே தங்கிவிட்டது. தேவர்கள் அடைந்த ஆச்சரியம் சொல்லி முடியாது. பகவானை நீலகண்டன் என்றும், ஸ்ரீகண்டன், நஞ்சுண்டன் என்றும் துதித்துக் கொண்டாடினார்கள்.
கொடிய விஷத்தால் ஏற்படவிருந்த அபாயம் நீங்கியதும் அசுரர்களும் தேவர்களும் மறுபடியும் மலையைக் கொண்டு கடலைக் கடைந்தனர்.
கடலிலிருந்து லக்ஷ்மி தோன்றினாள். ஜகஜ்ஜோதியாகப் பிரகாசிக்கும் முகக் காந்தியோடு சர்வாபரண பூஷிதையாக வெளிப்பட்ட அவளை விஷ்ணு ஏற்றுக் கொண்டார். அடுத்தாற் போல் தன்வந்தரி வெளிப்பட்டார். அவர் அனைவருக்கும் மருத்துவனாக ஆனார்.

அதன்பின்னர் சந்திரசூரியர், கல்பகத்தரு, உச்சைசிரவசு, காமதேனு, கௌஸ்துபம் ஆகியவை வெளிவந்தன. காமதேனு, பாரிஜாதம் எனப்படும் கல்பகத்தரு, உச்சைசிரவசு எனப்படும்  வெள்ளைக் குதிரை ஆகிய மூன்றையும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் எடுத்துக் கொண்டான். கௌஸ்துபம் விஷ்ணுவை அடைந்தது. முதலில் வருவதை தேவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். அமிர்தம் வந்ததும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருந்தனர் அசுரர்கள். தங்கள் திட்டத்தைத் தேவர்கள் அறிந்து கொள்ளாதிருக்கவே, அவர்களிடம் பிரியம் கொண்டவர்கள் போல், முதலில் வெளிப்பட்டவற்றை தேவர்களே எடுத்துக்கொள்ள அனுமதித்தனர்.

அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த அமிர்தம் வெளிப்பட்டது. அப்போது அதன் சில துளிகள் நாற்புறமும் சிந்தவே அவற்றிலிருந்து அழகிய ரூபலாவண்யமுள்ள மங்கையர்களாக அப்சரசுகள் தோன்றினர். அசுரர்கள் சட்டென்று தேவர்கள் எதிர் பாராத வேளையில் அமிர்த கலசத்தைக் கைக் கொண்டு ஓடினர். தேவர்கள் திகைத்துப்போய் தாங்கள் ஏமாந்து விட்டதை விஷ்ணுவிடம் கூறிப் பிரலாபித்தனர்.

மகாவிஷ்ணு அப்போது சௌந்தர்ய தேவதையாக மாயையால் மோகினி உரு எடுத்துக் கொண்டு அசுரர்களிடம்  சென்றார். அவர்களிடையே அமிர்தத்தைப் பகிர்ந்து கொள்வதில் தகராறு எழுந்தது. விஷ்ணு, அசுரர்களை அருகில் அழைத்து, தம்மிடம் கலசத்தைக் கொடுத்தால், தேவர்களுக்குத் துளித் துளி கொடுத்து விட்டு அவர்களுக்கு அதிகம் கொடுப்பதாக உரைத்தார்.

மோகினியின் மயக்கும் வடிவைக் கண்ட அசுரர்கள் அந்த அழகிலே மனம் லயித்துப் போய்ப் பாத்திரத்தை அவளிடம் கொடுத்தனர். பாற்கடலிலிருந்து தோன்றிய அப்சரசுகளை அழைத்து அசுரர்களின் மனத்தை மயக்கி அவர்கள் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்குமாறு சொல்லிவிட்டு, விஷ்ணு அமிர்தம் முழுமையையும் தேவர்களுக்கே கொடுத்துவிட்டார். அமிர்தபானம் முடிந்ததும் தேவர்கள் தேவலோகம் சென்று விட்டனர்.

சிறிது நேரத்துக்குப் பின்னரே அசுரர்களுக்கு அமிர்தம் பற்றிய நினைவு வந்தது. அப்சரசுகளை விட்டுவிட்டு ஓடி வந்த போது காலியான பாத்திரமே இருந்தது. தேவர்கள் போய் விட்டனர்

தாங்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணியபோது அசுரர்களுக்குப் பெரும் கோபம் உண்டாயிற்று. அப்சரசுகளைப் பாதாள லோகத்துக்கு அனுப்பிவிட்டுத் தேவர்களுடன் யுத்தத்துக்கு வந்தனர்.
அமிர்தம் பருகியதனால் தேவர்கள் புது வலிமை பெற்று விளங்கினார்கள். பலவகை அஸ்திரங்களோடு வந்து அசுரர்களுடன் போரிட்டனர். விஷ்ணுவும்  சக்கராயுதத்தை ஏந்தி யுத்தகளத்தில் புகுந்து எதிரிகளை நாசமாக்கினர். அசுரர்களில் அனேகர் தேவர்களால் எய்யப்பட்ட அஸ்திரங்களால் அழிக்கப்பட்டனர். எஞ்சிய சிலர் உயிர்தப்ப எண்ணிப் பாதாள லோகத்துக்குள் சென்று பதுங்கினர். விஷ்ணு அவர்களையும் ஒழிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு பாதாள லோகத்துள் சென்றார்

மாயையைத் தோற்றுவித்து அரக்கர்களை ஏமாற்றிய விஷ்ணு தாமே அந்த மாயையில் சிக்கிக்கொண்டார். பாதாளலோகத்தில் இருந்த அப்சரசுகளைக் கண்டதும், அவர்களது ரூப சௌந்தர்யங்களில் மயங்கித் தாம் வந்த வேலையை மறந்துவிட்டார். அவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சி கரமாகப் பொழுதைக் கழிக்கத் தொடங்கினார். விஷ்ணுவுக்கு அப்சரசுகளிடம் அனேக புத்திரர்கள் உண்டானார்கள்.

இப்படியிருக்க, அசுரர்களை அழித்து வருவதாகப் பாதாளலோகம் சென்ற விஷ்ணு திரும்பாததைக் கண்டு தேவர்கள் மிகுந்த கவலை கொண்டனர். அரக்கர்களின் கை ஓங்கியிருக்கிறதோ என்று பயந்தனர். எப்படியும் அவர்களை அழித்து மீளுவார் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர்.

பல நாட்கள் ஓடிவிட்டன. விஷ்ணு திரும்பவில்லை. அதன்மீது அவர்கள் சிவபெருமானிடம் ஓடிச் சென்று விஷயத்தை அறிவித்தனர். சர்வலோக சரண்யா, பாதாள லோகம் சென்ற விஷ்ணு திரும்பவில்லை. அவரில்லாமல் அநேக காரியங்கள் தடைப்பட்டு நிற்கின்றன. அவருக்கு என்ன ஆயிற்று என்பதும் தெரியவில்லை" என்று முறையிட்டனர்.

சிவபெருமானுக்கு விஷயம் தெரிந்து விட்டது. தான் செல்லாமல் விஷ்ணு வெளிப்படமாட்டார் என்பதை உணர்ந்து ரிஷபமாக உருவெடுத்தார். கையில் வில்லைத் தாங்கிச் சென்று பாதாள லோகத்தில் நுழைந்தார்.

உள்ளே சென்றதும் வில்லின் நாணைச் சுண்டி, ஹூங்காரம் செய்தார். அதன் சப்தத்தில் பாதாள லோகமே கிடுகிடுத்தது. விஷ்ணுவின் புத்திரர்கள் யாரோ எதிரி வந்திருக்கிறான் என்று பகவானுடன் யுத்தத்துக்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் ஈசன் நொடிப் பொழுதில் சம்ஹாரம் செய்தார்.

யாரோ ரிஷப ரூபத்தோடு பாதாளலோகம் வந்து அனைவரையும் அழித்து அட்டகாசம் செய்வதாக விஷ்ணுவுக்குச் செய்தி எட்டியது. சக்கராயுதத்தைக் கூட எடுக்க நேரமில்லாது ஓடி வந்தார் விஷ்ணு. அவரைக் கண்டதும் ஈசன்கல கலவென நகைத்து, நாராயணா, ரக்ஷிக்கும் தொழில் எல்லாம் நன்றாக நடந்து வருகின்றன போல் தோன்றுகிறது!" என்று ஏளனமாகக் கேட்டார்.

அந்த க்ஷணத்திலேயே நாராயணன் தாம் சிக்கியிருந்த மாயையிலிருந்து விடுபட்டார். தம்முடைய நிலையைக் கண்டதும் அவருக்கே அவமானமாகிவிட்டது. இரு கைகளையும் கூப்பி சிவபெருமானை வணங்கி, பிரபோ, என்னை மன்னித்து விடுங்கள். நான் சிருஷ்டித்த மாயையில் நானே சிக்கிக் கொண்டுவிட்டேன்" என்றார்.

நாராயணா, நீயில்லாமல் வைகுந்தத்தில் எத்தனையோ வேலைகள் தடைப்பட்டு இருக்கின்றன. இப்போதே புறப்படு" என்றார் சங்கரன்பிரபோ, சுதர்சனம் அரண்மனையில் இருக்கிறது, எடுத்துக் கொண்டு வருகிறேன்" என்றார் நாராயணன்

தேவையில்லை. நான் உனக்கு வேறு சக்கராயுதம் தருகிறேன். அது இங்கேயே இருக்கட்டும். இங்கு தவறு செய்பவர்களைத் தண்டித்து நல்வழிப்படுத்த, அது இங்கேயே இருக்கட்டும்" என்ற ஈசன் மனத்தாலே சுதர்சனம் ஒன்றை வரவழைத்து நாராயணனுக்கு அளித்தார். வைகுந்தம் திரும்பிய நாராயணனிமிடருந்து பாதாள லோக நிகழ்ச்சிகளைத் தேவர்கள் அறிந்துபோது பரவசமானார்கள். அங்குள்ள அழகிகளைத் தாங்களும் அடைந்து அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினார்கள். தேவர்களின் எண்ணத்தை அறிந்த பரமேசுவரனோ, யாரும் பாதாளலோகம்  செல்லக் கூடாதென்றும், அவ்வாறு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள் என்றும் கட்டளையிட்டார். பகவானின் கட்டளையை மீறிச் செல்ல யாருக்குத்தான் துணிவு வரும்?

பகவானின் கட்டளை, தேவர்களைத் தடுத்து நிறுத்தியதால் பாதாள லோகத்திலுள்ள அப்சரசுகளுக்கு அதுவே பெரும் தடையாகிவிட்டது. ஆண்கள் யாரும் வர வழியில்லாது போய் விட்டதால் அவர்கள் தனிமையில் வாடினர். லோக க்ஷேமத்துக்காகத் தேவர்கள் தங்கள் கொள்கைகளிலிருந்து வழுவிவிடக் கூடாதே என்பதற்காகப் பகவான் விடுத்த கட்டளை அவர்களைப் பாதித்துவிட்டதாக எண்ணி மனம் வருந்திக் கைலாசநாதனை வேண்டினர்.

ஈசனோ தாம் விடுத்த கட்டளையைத் தாமே மாற்ற விருப்பம் கொள்ளவில்லை. ஆகவே, அதற்கு ஓர் உபாயம் செய்தார். மிகுந்த கவலையுடன் அமர்ந்திருந்த நாதனைப் பார்த்ததும் பார்வதி வேதனையோடு அவரை நெருங்கி, காரணம் கேட்டாள். பிரியே, பாதாளலோகத்தில் உள்ள அப்சரசுகளின் அழகிலே மயங்கி, காம வசப்பட்டுத் தேவர்கள் தங்கள் காரியங்களை மறந்து அவர்களோடு இருந்துவிடப் போகிறார்களே என யாரும் போகக்கூடாதெனத் தடை  விதித்தேன். அதன் பலன் அப்சரசுகள் ஆண் துணையின்றித் தவிக்கின்றனர். என்ன செய்வதென்று புரியவில்லை. நீ சென்று அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லி வா" என்றார் பரமேசுவரன். அதன்படி பார்வதி பாதாள லோகம் சென்றாள்.

ஜகஜ்ஜோதியாக பிரகாசத்துடன் விளங்கும் தேவியைக் கண்டதும் முதலில் அவர்கள் சரியாக முகம் கொடுத்துப்  பேசவில்லை. காம வேதனையால் அவதியுறும் தங்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்க வந்திருக்கும் தேவமாதரில் ஒருத்தியாக எண்ணினர். ஆனால், வந்திருப்பது லோகமாதா என்பதை உணர்ந்தபோது அவர்கள் தங்கள் தவற்றுக்கு வருந்தி அவள் பாதங்களில் விழுந்து மன்னிக்குமாறு வேண்டினர். தாங்கள்படும் துயரங்களை எடுத்துச் சொல்லித் தங்களை ரக்ஷிக்குமாறு வேண்டினர்.

 உங்கள் நிலையை நன்கு உணர்ந்தே நான்  இங்கு வந்துள்ளேன். கவலைப்பட வேண்டாம். என் புத்திரர்கள் கையிலாசநாதனுக்குக் கணங்களாக இருக்கின்றனர். அவர்களிடம் சென்றால் உங்கள் வாழ்வு மேம்படும்" என்று அனுக்கிரகித்தாள் தேவி.
அவ்வாறே அப்சரசுகள் பாதாளலோகத்தை விட்டுக் கைலயங்கிரியை அடைந்து சிவகணங்களைத் தங்களது கணவர்களாக அடைந்து துயரம் நீங்கியவர்களாய் ஆனார்கள்.


ஹரி ஓம் !!!

No comments:

Post a Comment