Saturday 13 June 2020

சிவ புராணம் ( 35 )

35. தேவியை விரும்பிய அரக்கன் 


ருரு என்னும் பெயரை உடைய அசுரன் ஒருவன், ஒரு சமயம் சிவனின் பத்தினியான தாக்ஷாயணியைக் கண்டான். லோக மாதாவின் அழகு அரக்கனின் உள்ளத்தில் அப்படியே பதிந்து விட்டது. தேவியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆவலில் பிரம்மதேவனைக் குறித்து கடுமையான தவம் மேற்கொண்டான்.

பிரம்மதேவன் அவன் தவத்துக்கு மெச்சி அவன் முன் தோன்றி,” எனக்கு வேண்டிய வரத்தைக் கேள் “ என்றார்.

“ பிரபோ…. ! தாக்ஷாயணியை நான் மனைவியாக அடைய வேண்டும், ஈசன் எனக்கு அடங்கியவராக இருக்க வேண்டும் “ என கோரினான் அசுரம்

அவன் வார்த்தைகளைக் கேட்ட பிரம்ம தேவர் திடுக்கிட்டார் “ அடே துஷ்டா … ! என்ன வார்த்தைசொன்னாய் ? லோக மாதா உனக்கு மனைவி ஆக வேண்டுமா ? லோக ரக்ஷகனான சிவபெருமான் உனக்கு அடங்கி நடக்க வேண்டுமா ? இது எந்த காலத்திலும் நடக்க முடியாதது. என் வார்த்தௌய்ல் நம்பிக்கை இல்லாவிடில் தேவியிடமே நேரில் சென்று உன் விருப்பத்தைத் தெரிவித்துக்கொள் அப்போதே சிவபெருமான் உன்னை சம்ஹரிப்பார் “ என்று சொல்லி மறைந்தார், பிரம்ம தேவன்.

அதைக் கேட்ட ருரு, அங்கிருந்து நேராகக் கைலயங்கிரி சென்று பரமசிவனைக் குறித்து கடுமையான தவம் இயற்றினான். அவன் உடலில் இருந்து யோகாக்னி எழுந்து நாற்புறமும் பரவியது. சிவபெருமான், அந்த யோகாக்னியின் உஷ்ணத்தத் தாங்கமாட்டாதவர் போல, தாக்ஷாயணியை அழைத்துக் கொண்டு, வேறு இடம் செல்ல யத்தனிதார்.

அப்போது தேவி அவரைப் பார்த்து, “ ஸ்வாமி  ! ஏன் வேறிடத்தைத் தேடிப் போகவேண்டும் ? இந்த உஷ்ணத்தை உம்மால் அடக்க முடியாதா என்ன ? “ என்று கேட்டாள்.

“ தேவி… ருரு என்னும் அசுரன் உன்னையே மனைவியாக அடைய வேண்டி தவமிருக்கிறான். அவன் கோரும் வரத்தை அளிக்க முடியாதிருக்கிறது. ஆகவே, இந்த யோகாக்னியில் இருந்து விலகவே, வேறிடம் செல்ல நினைத்தேன். நீயே அவன் தவத்தை அழிக்க வேண்டும் “ என்றார் சிவன்

அசுரனின் தகாத ஆசையைக் கேட்ட தேவி, கடுங்கோபம் கொண்டாள். அதி பயங்கர ரூபத்துடன் அரக்கியாக மாறிய தேவி, வனத்தில் திரிந்து கொண்டிருந்த மத யானையையும், சிங்கத்தையும் வதம் செய்து, அவற்றின் தோலை ஆடையாக அணிந்தாள். பின்னர் அரக்கனின் முன் சென்று “ அசுரனே ! எந்த தாக்ஷாயணியை அடைய வேண்டுமென்ற தவம் புரிகிறாயோ, அவளே, இதோ உன் முன்னாள் நிற்கிறாள். கண்ணைத் திற “ என்றாள்.


கண்ணைத் திறந்த அசுரன், அக்கோர ரூபத்தைக் கண்டதும், “ நீ தாக்ஷாயணி அல்ல. அந்த சுந்தர ரூபத்திற்கும் இந்த கோர ரூபத்திற்கும் எத்தனை வித்தியாசம். இங்கே ஒரு க்ஷணமும் நிற்காதே ! உன்னை எரித்து சாம்பலாக்கிவிடுவேன் “ என்றான்.

“ உன்னால் முடியாத காரியம் அது “ என்றாள் தேவி.

அசுரன் , அண்ட சராசரங்களும் கிடுகிடுக்கக் கர்ஜித்துக் கொண்டு, தேவியை அடிக்க ஓடி வந்தான். தேவி தன் கை முஷ்டியால் ஓங்கி அடித்தாள். அசுரனோ மாயையால் பல அஸ்திரங்களைத் தருவித்து தேவியின் மீது எய்தான். தேவி அஸ்திரங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி, அவனை இரண்டாகக் கிழித்தாள். அவன் உடலில் இருந்து சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்திலும் இருந்து, அசுரர்கள் ஆயிரக் கணக்கில் உருவாயினர். தேவியும் அநேக சைன்யங்களைப் படைத்தாள். அவர்கள் அசுரர்களை அழித்து, அவர்களுடைய இரத்தம் பூமியில் சிந்தாது உறிஞ்சினர். ருரு,  மாயையால் வாயு ரூபம் கொண்டு, இமைக்கும்  நேரத்தில் சகல லோகங்களிலும் புகுந்து, தேவியின் கைகளில் சிக்காது ஓடினான்.

தேவியின் கோபம் பன்மடங்காகியது. விண்ணுக்கும், மண்ணுக்குமாக பெரும் உருவத்துடன் எங்கும் வியாபித்து நின்றாள், தேவி. அவளின் விஸ்வரூபத்தைக் கண்டு தேவர்களும் நடுங்கினர்.

நழுவப் பார்க்கும் அசுரனைப் பிடித்து கை முஷ்டியால் பலமுறை குத்தினாள். அசுரனின் உடம்பில் இருந்து இரத்தக் கொப்பளிக்க, அதையும் உறிஞ்சினாள், தேவி. அசுரனை அழித்து அவன் மண்டை ஓட்டில், அசுரனின் ரத்தத்தை ஏந்தி, சிவபெருமானிடம் வந்து நீட்டினாள். அசுர சம்ஹாரத்தால் அக்கிரம் அடைந்திருக்கும் தேவியைச் சாந்தப்படுத்த. ஈசன் அதை வாங்கி பருகினார். பின்னர், தேவியை அணைத்துக் கொண்ட ஈசன், மகிழ்சி நிறைந்த வார்த்தைகளைக் கூறினார். தேவி தான் அணிந்திருந்த இரு தோலாடைகளை  ஈசனுக்குக் கொடுத்தார். அவற்றை வாங்கிக் கொண்ட இறைவன், சிங்கத்தோலை இடையில் உடுத்திக்  கொண்டார், யானைத் தோலை தன் மேலே போர்த்திக் கொண்டார். தேவியும் மகிழ்ந்து, சாந்தமுற்று, தன் சுந்தர வடிவை அடைந்தாள்.

ஹரி ஓம் !!!





No comments:

Post a Comment