Thursday 25 June 2020

சிவ புராணம் ( 47 )


47. சதுர்தசி விரத மகிமை





ஜம்புத் தீவில் சதாநீகன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் இருந்தான். அவன் சிறந்த தர்மவான். தினமும் அதிதிகளுக்குப் பொன், வஸ்திரம் முதலியவற்றைத் தானமாக அளித்து வந்தான். அவனுக்கு ஒரு புத்திரன் பிறந்தான்.

அரசன் இறந்ததும், அவன் மகன் அரசனாக முடிசூட்டப் பெற்றான். அவனும் தந்தையைப் போலத் திறமை உடையவனாய் எண்திசையும் புகழ்பரவ, சத்துருக்கள் பயமின்றி, நாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவன் விருப்பமில்லாதிருந்தான். தந்தையைப் போல் ஏழை மக்களுக்குத் தானம் செய்வதில்லை.

அரசனால் கொடுக்கப்படும் தானங்களைக் கொண்டே வாழ்ந்து வந்த வேதியர்கள், இந்த மாறுபட்ட நிலையில் மிகவும் கஷ்டப்பட்டனர். முன்பெல்லாம் ஜீவனத்துக்குக் கவலை இல்லாதிருந்ததால் அவர்கள் நித்திய கர்மாக்களில் முழு நேரமும் ஈடுபட்டு வந்தனர். இப்போது அவர்கள் நேரம் முழுவதும்  ஜீவனத்தைப் பற்றிய கவலையிலேயே கழிந்தது. அதனால் அவர்களில் சிலர் ஒன்று கூடி அரசனிடம் சென்று இதைத் தெரிவிக்கலாமென்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் அரசனைச் சந்தித்துத் தங்கள் கஷ்டங்களை எடுத்துக் கூறினர்.

அவர்கள் வார்த்தைகளைக் கேட்ட அரசன் மெல்ல அவர்களை நோக்கிப் புன்னகை செய்தான். பின்னர் அவர்களிடம் தன் சந்தேகம் ஒன்றை விளக்குமாறு கேட்டான். இப்பிறவியில் சொர்ணம், வஸ்திரம், அன்னம் முதலானவற்றை சத்புருஷர்களுக்குத் தானம் செய்பவர் விண்ணுலகில் சுகபோகங்களுடன் வாழ்ந்து அடுத்த பிறவியிலும் நல்ல குலத்தில் பிறந்து மேன்மையாக இருப்பார்களென்று சொல்லப்படுகிறதல்லவா! என் தந்தை எத்தனையோ தான தருமங்களைத் தினமும் செய்து வந்திருக்கிறார். அவர் இப்போது எந்த லோகத்தில் எவ்வாறு இருந்து வருகிறார் என்பதை எனக்கு விளக்கிக் கூற முடியுமா? இந்த சந்தேகத்தைப் போக்க முடியுமானால் நானும் என் தந்தையின் வழக்கத்தைக் கடைபிடிக்கிறேன்".

அரசனின் வார்த்தைகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? வாடிய முகத்தோடு திரும்பிய அவர்கள் மற்றவர்களோடு கூடி என்னென்ன வழிகளிலெல்லாமோ யோசித்துப் பார்த்தார்கள். அறிஞர்களைச் சந்தித்து விசாரித்தார்கள். அவர்களுக்கு யாராலும் தகுந்த பதில் சொல்ல முடியவில்லை. அரசனின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியாதென்பதை உணர்ந்தபோது அவர்கள் வருத்தம் மேலும் அதிமாகிவிட்டது. அவர்களால் நித்திய கர்மாக்களை முழு மனத்தோடு செய்யமுடியவில்லை. அவற்றை விட்டு விட்டார்கள்.

வேதியர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை விடாது செய்து வந்தால்தானே தேவர்கள் பிரீதி கொண்டு லோகம் க்ஷேமமாயிருக்க அருளுவார்கள். இந்த நிலையைக் கண்ட சூரியன், வேதனை அடைந்தான். ஒரு பிராமணனாக வேடம் கொண்டு, அவர்களிடம் வந்து, அவர்கள் படும் துக்கத்துக்கான காரணத்தைக் கேட்டான்.

அவர்களும் நடந்த விஷயங்களைத் தெரிவித்தனர்அதனைக் கேட்ட சூரியன் நகைத்து, சகல சாஸ்திரங்களிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கப் போகிறது? உங்களுக்கு மட்டும் க்ஷேமமா? இந்த உலகம் அனைத்துக்கும் க்ஷேமமாக அல்லவா உங்களுக்கு நித்திய கர்மாக்கள் விதிக்கப்பட்டுள்ளன. அரசன் தானம் அளிக்காவிடில் அவன் இறந்துவிட்டதாகவே எண்ணுங்கள். தானம் எதையும் விரும்பாது அரசனின் உதவி இல்லாது நித்திய கர்மாக்களைச் செய்து வருபவனே சிரேஷ்டமானவன். அத்தகைய சிரேஷ்டரை அணுகி பூஜித்து உபசரித்தால் நீங்கள் சகல போகங்களையும் அடைவீர்கள்" என்றான்  சூரியன்.

அவ்வார்த்தைகளைக் கேட்ட வேதியர்களும் மனம் சாந்தி அடைந்தனர். அந்த க்ஷணமே சூரியன் அங்கிருந்து மறைந்தான். சிறந்த சத்புருஷனை நாற்றிசைகளிலும் அவர்கள் தேடிவரும் போது தவம் செய்துகொண்டிருந்த பார்க்கவ முனிவரைக் கண்டனர். அவரை அடைந்து வலம் வந்து வணங்கினர். உச்சி வேளைவரை நிஷ்டையிலிருந்த முனிவர், சூரியன் மேற்குத் திசையில் இறங்கத்  தொடங்கியதும் நிஷ்டை கலைந்து எழுந்தார். தம் எதிரில் அமர்ந்திருக்கும் வேதியர்களைக் கண்டதும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, அவர்கள் வந்திருப்பதன் காரணத்தைக் கேட்டார்.

வேதியர்களும் தாங்கள் வந்திருந்த காரணத்தை முனிவரிடம் விளக்கினர். முனிவரின் உள்ளம் வேதனையுற்றது. அன்பர்களே, வருத்தத்தைக் கைவிட்டு உங்கள் காரியங்களைச் செய்து வாருங்கள். என் தபோபலத்தால் இப்போதைய அரசனின் தந்தை எங்கிருக்கிறார் என்பதை அறிந்து நான் திரும்புவேன்" என்று ஆறுதல் வார்த்தை சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

அங்கு நடந்தவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த சூரியன், வேதியனாக முனிவர் முன்பு வந்து அவர் சொல்லும் காரியத்தில் தான் வழி காட்டுவதாகத் தெரிவித்தான். அவர்கள் இருவரும் போய்க்கொண்டிருக்கும்போது வழியில் ஒரு பிராமணன் முனிவரின் முன்பு வந்து அவரை மேலே செல்லவிடாது தடுத்தான்.

எனக்குக் கொடுக்க வேண்டியவற்றைக் கொடுத்தாலன்றி உன்னை மேலே செல்ல விடமாட்டேன்" என்றான் அவன். முனிவருக்கு ஒன்றும் புரிவில்லை. அவனைப் பார்த்து நீ யார்? உனக்கு நான் கொடுக்க வேண்டியது என்ன? நீ எனக்கு என்ன கொடுத்தாய்?" என்று கேட்டார். நான் முன் ஜன்மத்தில் புராண சிரவணம் செய்தபோது நீ அருகிலிருந்து கேட்டாய். அப்போது எனக்கு எதுவும் நீ கொடுக்க வில்லை. நான் கேட்டதற்கு, வீட்டிற்குச் சென்று கொண்டு வருவதாகச் சொல்லி சென்றாய். அப்புறம் திரும்பவேயில்லை" என்றான்அவன்.
ஐயா, எனக்குத் தெரிந்தவரையில் அப்படியொன்று நிகழ்ந்ததாக என் நினைவில் இல்லை. இருப்பினும் அது பூலோகத்தில் நிகழ்ந்ததல்லவா? அங்கே சென்று நாம் தீர்த்துக் கொள்வோம். இப்போது என் கையில் எதுவும் இல்லை" என்றார் பார்க்கவர். உன் புண்ணியத்தில் பாதியைக் கொடு. அப்போது தான் மேலே செல்லலாம்" என்றான் அவன்.

முனிவரோ முடியாதென்று மறுத்தார். பக்கத்திலிருந்த சூரியன், அவர்களிடையே தகராறை மத்யஸ்தம் செய்து வைப்பது போல் நல்ல வார்த்தைகளைக் கூறி, முனிவரின் புண்ணியத்தில் ஆறில் ஒருபங்கைத் தரச் செய்தான். அதன் பின்னரே அந்த வேதியன் அவர்களை மேலே செல்ல அனுமதித்தான்.

தொடர்ந்து மேலே செல்லும் போது ஒரு யாதவன் வந்து தடுத்தான். பார்க்கவரின் பசுக்களை மேய்த்ததில் அவனுக்குப் பணம் பாக்கியிருக்கிறதென்று தெரிவித்தான். அவன் பக்கத்திலிருந்த சூரியன், அவர்கள் தகராறை தீர்த்து வைத்து மறுபடியும் முனிவரின் புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கைத் தரச் செய்து மத்யஸ்தம் செய்தான். இன்னும் சிறிது தூரம் சென்றதும், சாலியன் ஒருவன் வந்து தடுத்தான். வஸ்திரங்கள் வாங்கிய வகையில் பாக்கி இருப்பதாக அவன் கூறினான். வஸ்திரங்களை வாங்கிப் பணம் கொடாதிருப்பது பெரும் பாவம். ஆகையால் முனிவரின் புண்ணியம் அனைத்துமே தரச் செய்து சாலியனைத் திருப்திப் படுத்தினான் சூரியன்.

முனிவர் தாம் பெற்றிருந்த புண்ணியம் அனைத்தையும் இழந்து விட்டதால், அவர் மேலே செல்லும் சக்தியை இழந்து அங்கேயே நிற்கும்படியாகிவிட்டது. அதன் பிறகு சூரியன் முனிவரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று யமலோகத்தை அடைந்தான். அங்கே ஓரிடத்தில் சதாநீக ராஜனை, யமகிங்கரர்கள் ஒரு பாத்திரத்தில் தள்ளி அடுப்பிலேற்றிக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர். அரசன் படும் வேதனையைக் கண்ட முனிவர் பெரிதும் துக்கித்தார்.

மகராஜனே! தினமும் தவறாது வேதியர்களுக்கு அனேக தானங்களைச் செய்து வந்த தங்களுக்கா இந்தக் கதி? எத்தனையோ புண்ணியங்களைச் செய்து வந்த தங்களுக்கு இத்துன்பம் வரக் காரணம் என்ன?" என்று கேட்டார்.

மகரிஷியின் வார்த்தைகளைக் கேட்ட அரசன், கண்ணீர் விட்டவனாய்,முனிசிரேஷ்டா, தாங்கள் கூறியபடி நான் நாள்தோறும் எத்தனையோ தான தருமங்கள் செய்து வந்திருக்கிறேன். எந்தச் சொத்தை நான் தானம் செய்தேனோ அச்சொத்து முழுவதும் குடி மக்களை வருத்தி அவர்களிட மிருந்து பெற்றதாகும். அதனால்தான் இந்தத் தண்டனையை அனுபவிக்கிறேன். தயவு செய்து என் மகனைக் கண்டு இப் பெரும் துன்பத்திலிருந்து நான் விடுபட, உகந்த காரியங்களைச் செய்யச் சொல்லுங்கள்" என்று வேண்டினான்.

பார்க்கவர் சூரியனைப் பார்த்து, ஐயா தங்களைத் தேவ புருஷராகவே மதிக்கிறேன். ஏனெனில் சத் ஜனங்களின் சம்பந்தம் ஏற்படும் போதுதான் ஒருவனுடைய மனம் ஞான மார்க்கத்தில் திரும்புகிறது. புண்ணிய கர்மாக்களைச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் தோன்றுகிறது. நான் செய்த புண்ணியம் அனைத்தும் இழந்து நின்றபோது, தங்கள் சம்பந்தத்தினாலேதான் இந்த இடத்துக்கு வரமுடிந்தது என எண்ணுகிறேன். அல்ப விவகாரங்களில் ஆசை வைத்துத் துன்புறுவோர் கடைத்தேறவும், தர்மங்களைச் செய்யாது இருப்பவர்களையும் உத்தாரணம் செய்யக் கூடியதுமான விரதம் இருக்குமானால் அதைச் சொல்ல வேண்டும்" என்று வேண்டினார்.
 சூரியனும் மிக மகிழ்ந்து ஐயனே, தருமத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்பவன், அந்தத் தருமத்தைச் செய்த பலனை அடைகிறான். லோகத்துக்கு க்ஷேமம் உண்டாகத் தருமத்தைச் செய்ய வேண்டும். நீ கேட்டபடி பலன் அளிக்கத் தக்க விரதம் ஒன்றிருக்கிறது. அதைக் கூறுகிறேன் கேள்" என்று சொன்னான். சித்திரை மாதம் பரமசிவனுக்கு மிகவும் விருப்பமானது. ஆகவே அந்த மாதத்தில் தேவர்களும் பரம பிரீதியுடன் இருப்பார்கள். பகவான் அந்த மாதத்தில் பால ரூபத்தோடு தேவியுடன் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருப்பார்.

சித்திரை மாதத்தில் வரும் சதுர்தசி அன்று தீபதானம் செய்வதானது சகலமான தேவர்களுக்கு இஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாகும். பூர்வ பக்ஷத்திலோஅமர பக்ஷத்திலே சதுர்தசி அன்று விரதமிருந்து பகவானை ஆராதித்துத் தீபதானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவர்கள் சகல பாபங்களினின்றும் நீங்கிப் புனிதத் தன்மையை அடைவார்கள். சூரியன் தெரிவித்த சதுர்தசி விரதத்தைத் கேட்ட பார்க்கவர் பூலோகம் திரும்பி, சதாநீக ராஜன் அனுபவித்து வரும் தண்டனையையும், அதிலிருந்து அவன் மீள்வதற்கான உபாயத்தையும் வேதியர்களிடம் தெரிவித்தார்.

இப்போதே சென்று அரசனிடம் விஷயத்தைத் தெரிவியுங்கள். அவர் தந்தையின் பாபம் தீருவதோடு உங்களுக்கும் பயன் ஏற்படும் வகையில் அவன்  நடந்து கொள்வான்" என்றார் பார்க்கவர். அவர்களோ தங்களோடு அவரையும் அழைத்துச் சென்று அரசனிடம் நடந்த விருத்தாந்தங்களைத் தெரிவித்தனர். அரசன் உடனே பக்கத்திலுள்ள புண்ணிய க்ஷேத்திரம் ஒன்றை அடைந்து, தன் செலவிலேயே பெரும் தடாகம் ஒன்று எடுத்து அதன் கரையில் சிவபெருமானைத் தியானித்து சதுர்தசி விரதம் இருந்து வேதியர்களுக்கும் பண்டிதர்களுக்கும் அனேக பசுக்களையும் தீபங்களையும் தானம் செய்தான். அதன் பலனால் நரகத்தில் வேதனைப்பட்டு வந்த சதாநீகராஜன் அத்துன்பத்திலிருந்து விடுபட்டு சொர்க்கலோகத்தை அடைந்து மகிழ்ந்திருந்தான்.


ஏகாதசி அன்று ஒரே கால போஜனமும் நீரும் அருந்தி துவாதசியில் எவரிடமும் யாசிக்காது உணவருந்தி, திரயோதசியில் பகலில் உபவாசமிருந்து இரவில் உணவு உட்கொண்டு சதுர்தசி அன்று சுத்த உபவாசத்தோடு இருந்து, பௌர்ணமி அன்று பூதானம் செய்வதால் சகலவிதமான நற்பலன்களையும் அடைவான். அவன் விஷயத்தில் சர்வேச்வரன் பரம பிரீதி உடையவராவார். வசதி இல்லாதவர்கள் அன்றையத் தினம் ஒரு பாத்திரத்தில் அது நிறையும்வரை நெய்யைவிட்டு அதற்கு வஸ்திரமோ அல்லது நூலோ, சுற்றி, சிவபெருமானைத் தியானித்து என் பாவங்கள் அனைத்தும் ஒழிய அருள வேண்டும்" எனப் பிரார்த்தித்துத் தானம் செய்ய வேண்டும். அவ்விதம் செய்வதால் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டுச் சுகத்தை அடைவர்.



ஹரி ஓம் !!!













No comments:

Post a Comment